மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள விரார் நகரில் கர்பா நிகழ்ச்சியில் நடனமாடிய 35 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார். சனிக்கிழமை இரவு விரரில் உள்ள குளோபல் சிட்டி வளாகத்தில் நடந்த கர்பா நிகழ்ச்சியில் நடனமாடும் போது மனிஷ் நாராப்ஜி சோனிக்ரா என்பவர் கீழே சரிந்து விழுந்தார்.
அந்த நபரை அவரது தந்தை நாராப்ஜி சோனிக்ரா (66) மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. மரணம் குறித்து கேள்விப்பட்ட அந்த நபரின் தந்தையும் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து மரணம் அடைந்தார். இரண்டு உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விபத்து மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அர்னாலா போலீசார் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 174ன் கீழ் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இறப்புக்கான சரியான காரணத்தை அறிய பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கின்றன என்று போலீசார் தெரிவித்தனர். மகன் மற்றும் தந்தையின் இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றன.
கர்பா நடனமாடி இளைஞர் ஒருவர் உயிரிழந்ததும், அந்த செய்தி கேட்டு அவரின் தந்தை அதிர்ச்சியில் இறந்ததும் அந்த பகுதியில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதேபோல, குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் 21 வயது இளைஞர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை அன்று கர்பா இசைக்கு நடனமாடும்போது சரிந்து கீழே விழுந்தார். இந்த கர்பா நிகழ்ச்சியை தாராபூரின் சிவசக்தி சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. வீரேந்திர சிங் ரமேஷ் பாய் ராஜ்புத் மயங்கி விழுவதற்கு முன் கர்பா நடனம் ஆடிக்கொண்டிருந்தார்.
இந்த சம்பவம் முழுவதையும் அவரது நண்பர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் வீரேந்திரா உயிரிழந்தார். அவர் மாரடைப்பால் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வீரேந்திரா இளைய மகன் ஆவார். அவரது தந்தை குஜராத்தில் உள்ள மோராஜ் கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் முதல்வராக உள்ளார்.