டெல்லியில் உள்ள சலவைப் பட்டறையில் இருந்து 1206 ஜோடி ஜீன்ஸ் ஆடைகள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி மாவட்டம் உத்தம் நகரைச் சேர்ந்த வேத் பிரகாஷ் திவாரி என்பவர் வெளிமாவட்டமான பார்ரோலோ பகுதியில் உள்ள தனது சலவைப் பட்டறையில் இருந்து ஜீன்ஸ் ஆடைகள் திருடப்பட்டது தொடர்பாக ரன்ஹோலா காவல்துறையில் புகாரளித்தார். இதுதொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது சம்பவம் நடந்த தினத்தன்று சலவைப் பட்டறை அருகில் டெம்போ வாகனம் ஒன்று சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்ததை கண்டனர்.
உடனடியாக டெம்போவின் பதிவு எண்ணை கொண்டு விசாரித்ததில் அது சஞ்சய் என்பவருடையது என தெரிய வந்தது. அவரைப் பிடித்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கடந்த ஜூன் 13 ஆம் தேதி அன்று ராஜு, சஞ்சீவ் என்ற இரு சகோதரர்கள் காரில் வந்து தன்னிடம் வேறு ஏதோ வேலைக்கு தேவை என சொல்லி டெம்போவை வாடகைக்கு எடுத்து சென்றதாக கூறியுள்ளார். பின்னர் டெம்போவுடன் வந்து துவாரகாவின் நவாடா பகுதியில் இருந்த வேத் பிரகாஷ் திவாரி என்பவரின் சலவைப் பட்டறையில் இருந்து ஜூன்ஸ் ஆடைகளை திருடியுள்ளனர்.
மீண்டும் ஜூன் 15 ஆம் தேதி டெம்போ உரிமையாளரான சஞ்சய் நிஹால் விஹார் பகுதியில் உள்ள சலவைப் பட்டறையில் ஜீன்ஸ் ஆடைகளை இறக்கி வைக்க ராஜு, சஞ்சீவால் அழைக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு முறை பயணத்திற்கு அவருக்கு ரூ.1000 ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது. அவர் கொடுத்த தகவலின் பேரில் திருடப்பட்டது என தெரியாமல் ரமீஸ் என்பவரிடமிருந்த ஜீன்ஸ் ஆடைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து டெம்போ உரிமையாளர் சஞ்சய் அளித்த புகாரின் பேரில் ஐபிசி 380 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சஞ்சீவ் கைது செய்யப்பட்டார். ஆனால் மற்றொரு குற்றவாளியான ராஜூ இதுவரை போலீசாரிடம் சிக்கவில்லை. சலவைப் பட்டறையில் இருந்து ஒரே நேரத்தில் இவ்வளவு ஜீன்ஸ் ஆடைகள் திருடப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்