உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக தந்தை கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொடூர சம்பவம் அம்மாநிலத்தின் சந்த் கபீர் நகர் பகுதியில் நடந்துள்ளது. கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் 13 வயதான அந்த சிறுமி வீட்டில் இருந்துள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாமல் அச்சிறுமி தனியாக இருந்துள்ளார். அப்போது சிறுமியை வளர்த்து வரும் நபர் இக்கொடூர காரியத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. பாதிக்கப்பட்ட அந்த சிறுமி தனது ஆசிரியரிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறியபோது இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.
உடனடியாக ஆசிரியர் அருகிலுள்ள காவல் நிலையத்தில் சிறுமியின் தந்தை மீது புகாரளித்தார். அதன்படி வழக்குப்பதிவு செய்த போலீசார் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படும் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அங்கு குறைந்தது மாதம் ஒரு வழக்காவது பதிவாகி வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது.
எனினும் சட்டத்தை கடுமையாக்கி சிறுமிகள் தொடங்கி பெண்கள் வரையிலான வன்முறை தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும் என பலரும் மத்திய மற்றும் மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கேரளாவில் மற்றொரு சம்பவம்
கேரள மாநிலத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு கொடுங்கல்லூரில் உள்ள சிறப்பு விரைவு போக்சோ நீதிமன்றம் பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தம் 65 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், ₹1,35,000 அபராதமும் விதித்துள்ளது. கொடுங்கல்லூரைச் சேர்ந்த 28 வயதான ஜிஷ்ணு தான் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டு குற்றவாளி என சிறப்பு போக்சோ நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார். மேலும் அபராதத் தொகை மீட்கப்பட்டவுடன் அதனைப் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒருவேளை அபராதம் செலுத்தத் தவறினால், குற்றம் சாட்டப்பட்டவர் கூடுதலாக 10 ஆண்டுகளுக்கு மேல் கடுங்காவல் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் கேரளாவைச் சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் கனடாவில் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். 16 வயதுக்குட்பட்ட நபரை பாலியல் நோக்கங்களுக்காகத் தொடுவது என்ற கருத்தின் அடிப்படையில் அவர் சிக்கியுள்ளார். அவர் டொராண்டோ மறைமாவட்டத்தில் பணியாற்றும் பாதிரியார் ஜேம்ஸ் செரிக்கல் என தெரிய வந்துள்ளது. இவர் 2024 முதல் பிராம்ப்டனில் உள்ள செயிண்ட் ஜெரோம் கத்தோலிக்க தேவாலயத்தின் பாதிரியாராக பணியாற்றி வருகிறார். பாதிரியார் செரிக்கல் 1997 முதல் மறைமாவட்டத்தின் கீழ் உள்ள பல்வேறு திருச்சபைகளில் பணியாற்றி வரும் நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.