குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் திரெளபதி முர்மு வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கருத்து ஒன்று வெளியிட்டுள்ளார்.


 






குடியரசு தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து நிறுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்த மம்தா, காங்கிரஸ் உள்பட பல கட்சிகளை இந்த விவகாரத்தில் தன் பக்கம் இழுத்தார். தொடர் ஆலோசனைக்கு பிறகு, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் யஷ்வந்த் சின்ஹா வேட்பாளராக களமிறக்கப்பட்டார்.


குடியரசு தலைவர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஜூலை 18ஆம் தேதி, முர்மு வெற்றிபெறுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டது. இதுதொடர்பாக பேசியுள்ள அவர், "தற்போதைய அரசியல் சூழ்நிலையில், குறிப்பாக மகாராஷ்டிராவில் நடந்ததை அடுத்து, திரௌபதி முர்முவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். பாஜக வேட்பாளர் பற்றி முன்பே தெரிந்திருந்தால் இதுபற்றி விவாதித்திருக்கலாம்.


பழங்குடியினர் மீது எங்களுக்கு அக்கறை உள்ளது. குடியரசுத் தலைவர் பதவிக்கு பழங்குடியினரை முன்னிறுத்துவோம் என்று பாஜக முன்பே கூறியிருந்தால், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாக அமர்ந்து விவாதித்திருக்கலாம். ஆனால் அவர்கள் எங்கள் ஆலோசனைகளை கேட்க மட்டுமே எங்களை அழைத்தார்கள். 


மக்கள் நலன் கருதி குடியரசு தலைவர் வேட்பாளர் நிறுத்தப்பட்டிருந்தால் அது நாட்டுக்கு சிறப்பாக இருந்திருக்கும். என்னால் இப்போது தனியாக எதுவும் செய்ய முடியாது. 17 கட்சிகளால் முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இனி செய்வதற்கு ஒன்றுமில்லை" என்றார்.


முர்மு, ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் ஆவார். ஒடிசாவை சேர்ந்தவர். குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில், பழங்குடியினத்தை சேர்ந்த முதல் குடியரசு தலைவர் என்ற பெருமையை பெறுவார். 2017 குடியரசு தலைவர் தேர்தலிலேயே, முர்முவின் பெயர் பரிசீலிக்கப்பட்டது. ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தில், அப்போதைய பிகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த், வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண