திரிபுராவில் வரும் மார்ச் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு தேர்தல் பரபரப்பு தொடங்கியுள்ள நிலையில், அம்மாநிலத்திற்கு சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராமர் கோயில் திறப்பு குறித்து அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
வரும் 2024ஆம் ஆண்டு, ஜனவரி 1ஆம் தேதி, அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் திறக்கப்படும் என தகவல் வெளியிட்டார். இந்த விவகாரத்தில், மத்திய அமைச்சர் அமித் ஷாவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக சாடியுள்ளார்.
கோயில் திறப்பு குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கு அமித் ஷாவுக்கு என்ன தகுதி உள்ளது என கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். "அனைவருக்கும் கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால், அதுவும் (திரிபுரா சட்டமன்ற) தேர்தலுக்கு முன்னதாக ஏன் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டீர்கள்? மேலும் (2024 மக்களவை) தேர்தல் மே மாதம் நடக்கும்போது, ராமர் கோவில் திறக்கப்படும் என்று சொல்கிறீர்கள்.
இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட நீங்கள் யார்? நீங்கள் ராமர் கோவிலின் பூசாரியா அல்லது தலைமை பூசாரியா? தலைமை பூசாரி மற்றும் சாமியார்கள் சொல்லட்டும். நீங்கள் ஒரு அரசியல்வாதி.
நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருப்பதும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதும், மக்களுக்கு உணவு கிடைப்பதை உறுதி செய்வதும், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு விலை கொடுப்பதுமேதான் உங்கள் வேலை. இதுதான் உங்கள் வேலை" என கார்கே விமர்சித்துள்ளார்.
வரும் 2024ஆம் ஆண்டு, மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ராமர் கோயில் திறப்பு பாஜகவுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி தரும் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். 1990களில், ராமர் கோயில் விவகாரத்தை முன்னிறுத்திதான், தேசிய அளவில் பாஜக மிக பெரிய கட்சியாக உருவெடுத்தது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடந்து வரும் இந்திய ஒற்றுமை நடைபயணத்தின்போது கார்கே இப்படி விமர்சித்திருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
நேற்றைய நடைபயணத்தில், குமாரி செல்ஜா, பூபிந்தர் சிங் ஹூடா, கே.சி.வேணுகோபால், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, சக்திசிங் கோஹில், கிரண் சவுத்ரி, திக்விஜய் சிங், தீபேந்தர் சிங் ஹூடா, டி.கே.சிவகுமார், உதய் பன் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பல விவகாரங்களை முன்னிலைப்படுத்தி ஆளும் பாஜகவை காங்கிரஸ் தலைவர் கார்கே விமர்சனம் செய்தார். தேர்தல் நேரத்தில் பெரிய வாக்குறுதிகளை பாஜக அளிப்பதாகவும் ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு அதை நிறைவேற்றுவதில்லை என்றும் குற்றம்சாட்டினார்.