கடந்த நவம்பர் மாதம், ஏர் இந்தியா விமானத்தில் சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்த மும்பையை சேர்ந்த சங்கர் மிஸ்ரா என்ற நபர் டெல்லி காவல்துறையால் இன்று கைது செய்யப்பட்டார்.
தலைமறைவாக இருந்த நிலையில், நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்கும் வகையில் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. மிஸ்ரா எங்கிருக்கிறார் என்பது குறித்து தகவல்கள் கிடைத்ததையடுத்து கர்நாடகா மாநிலம் பெங்களூருவுக்கு தனது குழுவை டெல்லி காவல்துறை அனுப்பியது.
அவர், தனது செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்து வைத்திருந்ததாகவும் சமூக வலைதள கணக்குகள் மூலம் நண்பர்களை தொடர்பு கொண்டு வந்ததாகவும் காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
மிஸ்ரா பயன்படுத்திய சமூக வலைதள கணக்கை பின்தொடர்ந்த பிறகு அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்து தெரிய வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், அவர் ஒரு இடத்தில் கிரெடிட் கார்டு பயன்படுத்தியதும் தெரிய வந்துள்ளது.
கடந்த நவம்பர் 26ஆம் தேதி, நியூயார்க்கில் இருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானத்தின் பிஸ்னஸ் வகுப்பில், குடிபோதையில் பயணித்த பயணி, 70 வயது மதிக்கத்தக்க சக பெண் பயணியின் மீது சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது.
அந்த பெண் விமான குழுவிடம் புகார் அளித்துள்ளார். தனது உடைகள், காலணிகள், பை ஆகியவை சிறுநீரில் நனைந்திருப்பதாக அவர் கூறியுள்ளார். விமான குழுவினர் தங்களிடம் உடைகள் மற்றும் செருப்புகளை கொடுத்துவிட்டு இருக்கைக்குத் திரும்பச் சொன்னதாகக் கூறப்படுகிறது.
விமானம் டெல்லியில் தரையிறங்கிய பிறகு, அந்த பயணி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமலேயே அவர் அங்கிருந்து சென்றுவிட்டார். ஏர் இந்தியா உரிமையாளரான டாடா குழுமத்தின் தலைவர் என் சந்திரசேகரனுக்கு அந்தப் பெண் கடிதம் எழுதியதை அடுத்து, விமானத்தில் செல்ல அவருக்கு தடை விதிக்கப்பட வேண்டும் என ஏர் இந்தியா விமான நிறுவனம் பரிந்துரை செய்தது.
இச்சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, அலட்சியமாக செயல்பட்ட அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என ஏர் இந்தியா விமான நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.
டாடா குழுமத்தின் தலைவருக்கு அந்த பெண் எழுதிய கடிதத்தில், "சிறுநீர் கழிக்கப்பட்ட இருக்கையில் உட்கார விரும்பவில்லை என கூறினேன். எனவே, எனக்கு விமான பணியாளரின் இருக்கை வழங்கப்பட்டது.
ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, எனது இருக்கைக்குத் திரும்பும்படி விமான பணியாளர்கள் கூறினர். சிறுநீர் கழிக்கப்பட்ட இருக்கை கவர் கொண்டு மூடப்பட்டிருந்தது. ஆனால், தொடர்ந்து துர்நாற்றம் அடித்து கொண்டிருந்தது. விமான பணியாளர்கள் இருக்கையில் கிருமிநாசினி தெளித்தனர்.
அதே இருக்கையில் அமர்வதற்கு நான் மறுப்பு தெரிவித்துவிட்டேன். எனக்கு மற்றொரு விமான பணியாளரின் இருக்கை வழங்கப்பட்டது. அன்று முழுவதும் நான் அங்கேயே படுத்து உறங்கினேன். பல பிஸ்னஸ் வகுப்பு இருக்கைகள் காலியாக இருந்த போதிலும் எனக்கு அந்த இருக்கை வழங்கப்படவில்லை" என குற்றம் சாட்டி இருந்தார்.
இதையடுத்து, சிறுநீர் கழித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.