கடந்த 10 ஆண்டுகால மோடி அரசின் மோசமான உள்கட்டமைப்பு சீர்குலைந்து போனதற்கு ஊழல் மற்றும் அலட்சியமே காரணம் என காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். 


டெல்லி விமான நிலைய மேற்கூரை விபத்து:


டெல்லியில் நேற்று முதல் இன்றுவரை கனமழையானது கொட்டித் தீர்த்தது. இதனால், நகரத்தின் பெரும் பகுதிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகின. மக்களின் இயல்பு வாழ்க்கையும் சிரமத்திற்குள்ளாகியுள்ளது. இதில், கடந்த மார்ச் மாதம் பிரதமர் மோடி திறந்துவைத்த டெல்லியின் டெர்மினல் 1 விமான நிலையத்தின் மேற்கூரையும் இடிந்து விழுந்தது.


இதனால் 3 பேர் உயிரிழந்த சோக நிகழ்வும் ஏற்பட்டது. இந்நிலையில், இது குறித்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் வைத்துள்ளன. இது போன்ற அசாம்பாவதிங்கள் ஏற்படுவதற்கு ஊழல் மற்றும் அலட்சியமே காரணம்  என குற்றச்சாட்டுகள் வைத்து வருகின்றன.


எதிர்க்கட்சிகள் விமர்சனம்:  


ஜபல்பூர் விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்தது, ராம் மந்திரில் ஏற்பட்ட கசிவு, பிரகதி மைதான சுரங்கப்பாதை, மோர்பி பாலம் இடிந்து விழுந்தது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பாக காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மத்திய அரசை கடுமையாக குற்றம் சாட்டுகள் வைத்தன அரசின் உள்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்து கடுமையாக சாடிய எதிர்க்கட்சிகள், பாஜக அரசு இருக்கும் மாநிலங்களில் ஊழல் இருப்பதாகக் கூறின.


இந்நிலையில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, எக்ஸ் வலைதள பக்கத்தில் மோடி தலைமையிலான அரசாங்கத்தில் கட்டுமான சேதங்கள் ஏற்பட்டுள்ளதை பட்டியலிட்டுள்ளார்.



  • டெல்லி விமான நிலையத்தின் (டி1) மேற்கூரை இடிந்து விழுந்தது,

  • ஜபல்பூர் விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்தது,

  • அயோத்தியின் புதிய சாலைகளின் பரிதாப நிலை,

  • ராம் மந்திர் கசிவு,

  • மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்பு சாலையில் விரிசல்,

  • 2023 மற்றும் 2024 இல் பீகாரில் 13 புதிய பாலங்கள் இடிந்து விழுகின்றன.

  • பிரகதி மைதான் சுரங்கப்பாதை நீரில் மூழ்கியது,

  • குஜராத்தில் மோர்பி பாலம் இடிந்து விழுந்த சோகம்,  






"உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை" உருவாக்குவோம் என பிரதமர் மோடி மற்றும் பாஜகவினரின் கூற்றுக்களை அம்பலப்படுத்தும் சில நிகழ்வுகள்தான் இது என்றும் இந்த பொய்யான சொல்லாடல்கள் அனைத்தும் தேர்தலுக்கு முன் ரிப்பன் வெட்டும் விழாக்களில் விரைவாக ஈடுபடுவதற்கு மட்டும்தான் என கார்கே தெரிவித்துள்ளார்.  


டெல்லி விமான நிலைய சோகத்தில் பலியானவர்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். ஊழல், திறமையற்ற மற்றும் சுயநல அரசாங்கத்தின் சுமைகளை அவர்களை பாதித்துள்ளது எனவும் காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே குறிப்பிட்டுள்ளார்.