மணிப்பூரில் நடந்து வரும் மனிதத்தன்மையற்ற சம்பவங்கள் ஒட்டுமொத்த தேசத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. குறிப்பாக, பழங்குடி பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் வீடியோவாக வெளியாகி மக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. இரண்டு மாதங்களாக மணிப்பூர் இனக்கலவரம் குறித்து வாய் திறக்காத பிரதமர் மோடி, கூட, இதை கடுமையாக கண்டித்துள்ளார்.


நாடாளுமன்றத்தில் அனல் பறந்த விவாதம்:


கடந்த வியாழக்கிழமை தொடங்கிய நாடாளுமன்றம், இதன் காரணமாக முடங்கி போயுள்ளது. மணிப்பூர் பிரச்னை தொடர்பாக இரு அவைகளிலும் பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். விதி எண் 267இன் கீழ் அனைத்து அவை நடவடிக்கைகளையும் ஒத்திவைத்துவிட்டு, மணிப்பூர் குறித்து நீண்ட விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரி வருகின்றனர்.


ஆனால், விதி எண் 176இன் கீழ் குறுகிய நேரத்திற்கு மட்டுமே விவாதிக்க முடியும் ஆளும் பாஜக அரசு தெரிவித்து வருகிறது. இதனால், நாடாளுமன்றம் இன்றும் முடங்கியது. 


இந்த சூழலில், மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது, அவரின் மைக் அணைக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது. இன்றைய கூட்டத்தில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் முழக்கங்களை எழுப்பி வந்தனர். 


பேசி கொண்டிருந்தபோதே கார்கேவின் மைக் அணைக்கப்பட்டதா?


அப்போது, 'மோடி', 'மோடி' என ஆளுங்கட்சியினர் பதில் கோஷம் எழுப்பினர். இதனால், நாடாளுமன்றத்தில் பெரும் அமளி ஏற்பட்டது. இதற்கிடையே, கார்கேவின் மைக் அணைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 


பேச்சின் நடுவே குறுக்கிட்டதால் கார்கே கடும் கோபத்தை வெளிப்படுத்தினார். இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள், கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து, மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர், மற்ற உறுப்பினர்களை இருக்கையில் அமரும்படி கேட்டுக் கொண்டார்.


இதனிடையே பேசிய கார்கே, "இது எனக்கு வழங்கப்பட்ட சிறப்புரிமையை மீறிய செயலாகும். இது எனக்கு நேர்ந்த அவமானம். எனது சுயமரியாதைக்கு சவால் விடப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களின்படி சபை நடத்தப்பட்டால், அது ஜனநாயகம் அல்ல என்றே புரிந்து கொள்வேன்" என்றார்.


தங்களின் பின்னே 7 உறுப்பினர்கள் நின்று கொண்டிருப்பதாக கார்கேவிடம் ஜெகதீப் கூறினார். அதற்கு பதில் அளித்த கார்கே, "அவர்கள், என் பின்னாடி நிற்காமல், மோடியின் பின்னா நிற்பார்கள்? என்றார். இதை கேட்ட மற்ற உறுப்பினர்கள் சிரித்துவிட்டனர். இருப்பினும், அமளி தொடர்ந்து கொண்டே இருந்தது.


ஒழுங்கை மீட்டெடுக்க உதவுமாறு கார்கேவிடமும் மாநிலங்களவை பாஜக தலைவர் பியூஷ் கோயலிடமும் தன்கர் வேண்டுகோள் விடுத்தார். இருப்பினும், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கிடையே கடும் கருத்து பரிமாற்றம் நடந்து வந்தது. இறுதியில், கார்கேவின் மைக் அணைக்கப்படவில்லை என தன்கர் விளக்கம் அளித்தார்.