இந்திய முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் பிறந்தநாளை ஒட்டி காங்கிரஸ் தலவைர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் சக்தி ஸ்தலத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். 






 


இதேபோன்று, நாடு முழுவதும் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், இந்திரா காந்தியின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர். 


இந்திரா காந்தி தனிப்பட்ட வாழ்க்கை:


1917ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி உத்தரபிரதேசத்தில் உள்ள அலகாபாத் நகரில் இந்திரா காந்தி பிறந்தார்.  இவர் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஐவஹர்லால் நேருவின் ஒரே மகளாவார்.  இவர் சாந்தி நிகேதனிலும், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்திலும் படித்த நிலையில்,  1938ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1942ம் ஆண்டு ஃபெரோஸ் காந்தியை திருமணம் செய்துகொண்ட நிலையில்,  சஞ்சய் காந்தி மற்றும் ராஜிவ் காந்தி என இரண்டு மகன்கள் பிறந்தனர்.


இந்திரா காந்தி அரசியல் வாழ்க்கை:


 1959ம் ஆண்டு இந்திரா காந்தி காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1964ம் ஆண்டு ராஜ்யசபா உறுப்பினர் ஆன நிலையில், மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சரானார். அப்போது லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்தார்.  அவரது மறைவையொட்டி இந்திரா பிரதமராக பொறுப்பேற்றார். இதன் மூலம் இந்தியாவின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்றார். 


அவசர நிலை பிரகடனம்:


இவரது தலைமைக்கு எதிர்ப்புகள் கிளம்ப கட்சி இரண்டாக உடைந்தது. தொடர்ந்து 1971ம் ஆண்டு தேர்தலில் இந்திரா காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் வெற்றி பெற்றது.  ஆனால்,  அந்த தேர்தலில் விதிமுறைகளை மீறி வெற்றி பெற்றதாக அறிவித்தது. அதன் மூலம்,  1975ம் ஆண்டு அலகபாத் நீதிமன்றம், இந்திரா காந்தி பதவி விலகி, 6 ஆண்டுகள் அரசியலில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தில் இவர் தாக்கல் செய்த மனுவிலும் இவருக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை.  அப்போது அவர் இந்தியா முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்து, அரசியல் எதிரிகளை சிறையிலடைத்தார். குடும்ப கட்டுப்பாடு உள்ளிட்ட பல கொள்கைகளை இந்த காலகட்டத்தில் நிறைவேற்றினார்.  இரண்டு ஆண்டுக்குப்பின் அவசர நிலை பிரகடனம் தளர்த்தப்பட்டு, தேர்தல் நடைபெற்றது. அப்போது இந்திரா காந்தி தோற்றகடிக்கப்பட்டார்.


கொல்லப்பட்ட இந்திரா காந்தி:


ஜனதா கட்சி மெரார்ஜி தேசாய் தலைமையில் ஆட்சி அமைந்ததும், ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக இந்திரா காந்தி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் மீண்டும் பதவிக்கு வந்தார்.  1980களில் இந்தியாவின் அரசியல் ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் வந்தது. மத்திய அரசிடம் இருந்து பல்வேறு மாநிலங்களும் சுதந்திரம் கேட்டன. பஞ்சாபில் சீக்கியர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். 1982ம் ஆண்டு அவர்களின் போராட்டம் வலுக்கவே, அவர்கள் மீது ராணுவத்தை இந்திராகாந்தி ஏவினார். இதில் 450 சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள். இதற்குப்பின் சில மாதங்களில் டெல்லியில் உள்ள அவரது வீட்டு தோட்டத்தில், அவரது பாதுகாவலர்களாக இருந்த இரண்டு சீக்கியர்கள் இந்திரா காந்தியை சுட்டுக்கொன்றனர்.