சட்டவிரோத செயல்பாடுகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட 84 வயது ஸ்டேன் சுவாமி சில நாட்களுக்கு முன் உயிரிழந்தார். பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு உரிய மருத்துவ வசதி கிடைக்கவில்லை என்றும், அவரின் மரணத்துக்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில், மத்திய பிரதேசம் போபால் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பிரக்யா சிங் தாகூர் திருமண நிகழ்வில் நடனமாடும் வீடியோ சமூக ஊடங்களில் பேசும் பொருளாகி வருகிறது.  


2006 மலேகான் குண்டு வெடிப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாகிய சேர்க்கப்பட்டவர் பிரக்யா சிங் தாகூர். 2017  ஆண்டு பிணை வழங்கப்படுவதற்கு முன்னர் ஒன்பது ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.  






2019 இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், போபால் மக்களவைத் தொகுதியில் போட்டியியட்ட இவர், முன்னாள மத்தியப் பிரதேச முதல்வரும், இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளுருமான திக்விஜய் சிங்கை 3,64,822 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


2021 ஜனவரியில், அவரின் மோசமான உடல்நிலை மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மும்பை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றம் தாகூரை நேரில் ஆஜாரகுவதில் இருந்து தற்காலிகமாக விலக்கு அளித்து உத்தரவிட்டது.  


சில நாட்களுக்கு முன்னதாக, பிரக்யா சிங் தாக்குர் தனது நண்பர்களுடன் கூடைப்பந்து விளையாடும் காட்சி வைரலானது. இதனை கடுமையாக விமர்சித்த காங்கிரஸ் மூத்த தலைவர் நரோந்திர சலூஜா,"சக்கர நாற்காலியில் மட்டுமே பார்த்து வந்த பிரக்யாவை இன்று கூடைப்பந்து மைதானத்தில் பார்க்கிறோம். நடக்க கூட முடியாமல் சிரமப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அவர், எப்போதும் நல்ல உடல்நிலையுடன் இருக்க கடவுளை பிரார்த்திக்கிறேன்" என தெரிவித்தார்.


 






இந்த வழக்கில், பிரக்யா சிங் தாக்குர், ராணுவ அதிகாரி புரோகித், 3 முன்னாள் இராணுவ அதிகாரிகள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். குண்டு வெடிப்பில் தொடர்புடைய அபினவ் பாரத் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ராணுவ அதிகாரிகள் பயிற்சி அளித்துள்ளதும், அவர்கள் மூலம் குண்டு வெடிப்பு நாசவேலை நடத்தப்பட்டதும் காவல்துறையினரின் புலன் விசாரணையில் தெரியவந்தது. 


மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகான் என்ற நகரில் உள்ள பள்ளிவாசல் அருகே நடைபெற்ற இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 10 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில், பிரக்யா சிங் தாக்குரின் வாகனம் பயன்படுத்தப்பட்டது புலன் விசாரணையில் தெரிய வந்தது.       




சட்டவிரோத செயல்பாடுகள் (தடுப்பு) சட்டத்தின் பல பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இருப்பினும், 2017ல் தேசிய புலனாய்வு முகமை பிரக்யா சிங் மீது பதிவுசெய்யப்பட்ட கடுமையான குற்றப்பிரிவுகளை தளர்த்தினர். இதனையடுத்து, நிபந்தனை ஜாமினில் வெளியே விடப்பட்டார்.