உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மிகவும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இரண்டாவது அலை மிகவும் மோசமாக இருந்தது. இதனால் அனைத்து மக்களிடமும் வேகமாக தடுப்பூசி செலுத்தும் பணியில் மத்திய மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. இந்தச் சூழலில் கர்ப்பிணி பெண்கள் பலர் தடுப்பூசி செலுத்தி கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கர்ப்பிணி பெண்கள் ஏன் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து நிதி ஆயோக் சுகாதார உறுப்பினர் மருத்துவர் விகே பால். “கொரோனா தொற்று பாதிப்பு கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் ஆபத்தான ஒன்றாக அமைகிறது. ஏனென்றால் கரப்பிணி பெண்களின் உடல்நிலை அப்போது இயல்பை விட சற்று மாறுபடும். அத்துடன் அப்போது அது ஒரு உயிர் சம்பந்தப்பட்டது அல்ல. இரண்டு உயிர்கள் சம்பந்தப்பட்டதாக ஆகிறது. 




மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலங்களில் வேறு சில பிரச்னைகள் வரக்கூடும். அதனால் அவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வது மிகவும் அவசியமாக உள்ளது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டால் அவர்களுக்கும் அவர்களுடைய குழந்தைக்கும் பெரிய பரவும் சூழல் உருவாகும். இதன் காரணமாக கர்ப்ப காலம் முடியாமல் பாதியிலேயே குழந்தையை வெளியே எடுக்க வேண்டிய சூழல் உருவாகும். இப்படி ஒரு நிலையை தடுக்க கர்ப்பிணி பெண்கள் நிச்சயமாக கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது. 


முதலில் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்த அரசு அனுமதிக்கவில்லை. ஏனென்றால் அப்போது அவர்களுக்கு பாதிப்பு  எதுவும் ஏற்படுமா என்பது தொடர்பான ஆய்வுகள் இல்லை. தற்போது அந்த ஆய்வுகளின் முடிவில் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசியால் எந்தவித பிரச்னையும் வராது என்பது தெளிவாக தெரியவந்துள்ளது” எனக் கூறினார். 




இந்தியாவில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள கோவேக்சின், கோவிஷீல்ட் மற்றும் ஸ்புட்னிக் ஆகிய மூன்றும் கர்ப்பிணி பெண்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தி கொள்ளவதால் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கருவுறுதலில் பிரச்னை வரும் என்ற வதந்தி தவறானது. ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருவருக்கும் தடுப்பூசி செலுத்தி கொள்வதால் கருவுறுதலில் (fertility) பிரச்னை எதுவும் வராது என்று மத்திய அரசு தெளிவாக தெரிவித்துள்ளது. 


இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி மாதம் முதல் தொடங்கப்பட்டது. மே மாதம் முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. எனினும் அப்போது கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தி கொள்ள அரசு அனுமதி அளிக்கவில்லை. சமீபத்தில் தான் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகிய அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: ஹரியானா, குஜராத் மாநிலங்களில் மீண்டும் திறக்கப்படுகின்றன பள்ளிகள்..!