"சுற்றுலா பயணிகளின் வருகை குறைவு"


மாலத்தீவுக்கு சுற்றுலா வரும் இந்தியர்களின் எண்ணிக்கை 33 சதவீதம் குறைந்துள்ளதாக மாலத்தீவு சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டில் மார்ச் மாதத்தில் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய சுற்றுலா பயணிகள் மாலத்தீவுக்கு வருகை தந்தனர்.


ஆனால், 2024ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை 27,224 ஆக, அதாவது 33 சதவீதம் குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தியர்களை லட்சத்தீவுகள் செல்லுமாறு இந்திய அரசு ஊக்குவிப்பது இந்த சரிவுக்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.


2021, 2022 மற்றும் 2023ஆம் ஆண்டு வரை இந்தியாவில் சிறந்து சுற்றுலா தளமாக மாலத்தீவின் இருந்தது. ஆண்டுக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள்  மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று வந்தனர். மாலத்தீவு சுற்றுலா சந்தையில் இந்தியாவின் பங்கு 10 சதவீதமாக இருந்தது. ஆனால் இந்தியா மற்றும் மாலத்தீவுகள் இடையிலான உறவுகள் பாதிக்கப்பட்டதால் இந்தியா 6 சதவீத பங்குடன் 6வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.


முதலிடத்தில் சீனா:


மாலத்தீவுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை பெரும் சரிவை காணும் அதே வேளையில்,  அங்கு செல்லும் சீனர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது. சீனாவிற்கும் மாலத்தீவிற்கும் இடையிலான உறவுகள் வலுவாக இருப்பதால், 2024 ஆம் ஆண்டில் சீனாவில் இருந்து 54 ஆயிரம் சுற்றுலா பயணிகள் மாலத்தீவுக்கு வருகை தந்துள்ளனர்.


இதனால், மாலத்தீவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் சீனா முதல் இடத்தில் உள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரியில் மொத்தம் 2,17,394 சுற்றுலாப் பயணிகள் மாலத்தீவுக்கு வந்துள்ளனர். இதில்,  34,600-க்கும் மேற்பட்டவர்கள் சீனாவிலிருந்து வந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்திய, மாலத்தீவு நாடுகளுக்கிடையே என்ன பிரச்னை?


கடந்தாண்டு நவம்பர் மாதம், மாலத்தீவில் சீன ஆதரவு முகமது முய்சு அரசாங்கம் அமைந்ததில் இருந்தே, இந்திய - மாலத்தீவு நாடுகளுக்கு இடையே நிலவி வந்த சுமூகமாக உறவு பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, லட்சத்தீவுக்கு பிரதமர் மோடி மேற்கொண்ட பயணம், இந்திய - மாலத்தீவு நாடுகளுக்கு இடையேயான பிரச்னையை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து சென்றது.


மாலத்தீவுக்கு போட்டியாக லட்சத்தீவை சுற்றுலா தலமாக மாற்றவே இந்திய பிரதமர் மோடி, அங்கு சென்றதாக மாலத்தீவு அரசியல் தலைவர்கள் விமர்சித்தனர். அதோடு நின்றுவிடாமல், பல ஆட்சேபனைக்குரிய கருத்துகளை தெரிவித்தனர்.  மாலத்தீவு எம்.பி. ஜாஹித் ரமீஸ், மாலத்தீவு அமைச்சர்கள் அப்துல்லா மஹ்சூம் மஜீத், மரியம் ஷியூனா ஆகியோர், இந்தியாவுக்கு எதிராக கடுமையாக பேசினார்.


மாலத்தீவு எம்பியும் அமைச்சரும் தெரிவித்த கருத்து இந்தியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பெரும் அழுத்தத்தை தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக பேசிய 3 மாலத்தீவு அமைச்சர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதே வேளையில், இந்தியர்கள் பலர் மாலத்தீவு பயணத்தை ரத்து செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க


6+2 பார்முலா.. பாஜக கூட்டணியில் இணையும் சந்திரபாபு நாயுடு.. ஆந்திராவில் மெகா பிளாள்!