ஹைதராபாத்தில் இருந்து மலேசியா நோக்கி சென்ற விமானத்தின் இன்ஜினில் பழுது ஏற்பட்டு தீ பறந்ததால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 






என்ன நடந்தது..? 


ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்கு விமானம் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஹைதராபாத்தில் இருந்து விமானம் புறப்பட்டவுடன் அதன் இன்ஜினில் இருந்து தீப்பொறிகள் வெளியேற ஆரம்பித்தன. தொழில்நுட்ப கோளாறை உடனடியாக கண்டறியப்பட்டத்தை அடுத்து, விமானம் மீண்டும் ஹைதராபாத் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. 


நள்ளிரவு 12.30 மணியளவில் விமானம் புறப்பட்டு அதன் இயந்திரம் ஒன்றில் தீப்பிடித்ததால், விமானம் ஹைதராபாத்தில் அதிகாலை 3.21 மணிக்கு பாதுகாப்பாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. நல்லவேளையாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று மலேசிய ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “ விமானம் புறப்பட்ட பிறகு மேலே ஏறும் போது இன்ஜின் பிரச்சினை   இருந்தது தெரியவந்தது. எதிர்பாராத இந்த நிகழ்வால் பாதிக்கப்பட்ட அனைத்து பயணிகளும் தங்கள் பயணத்திற்காக மற்ற விமானங்களில் டிக்கெட்கள் முன்பதிவு செய்து கொடுக்கப்பட்டது. மேலும், எதனால் இந்த தவறு நடந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. 






எத்தனை பேர் பயணம்..? 


MH 199 என்ற போயிங் 737-800 விமானம் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் காலை 7.10 மணிக்கு (உள்ளூர் நேரம்) தரையிறங்க திட்டமிடப்பட்டது. அதில் 7 பணியாளர்கள் உட்பட 138 பேர் இருந்ததாக தெரிகிறது. 


தீப்பொறி பறந்ததை விமானி கவனித்ததால், தரையிறங்குவதற்கான அனுமதிக்காக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டை (ATC) தொடர்பு கொண்டுள்ளார். விமானத்தை அவசரமாக தரையிறக்க ஏடிசி உடனடியாக அனுமதித்தது ஆனால், பாதுகாப்பு நெறிமுறைகள் காரணமாக, தரையிறங்குவதற்கு முன்பு விமானம் சிறிது நேரம் வட்டமிட்டதாக கூறப்படுகிறது.