டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கவுள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடிக்கு பதில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு திறக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. ஆனால், நீதிமன்றம் அந்த மனுவை நிராகரித்துவிட்டது.


புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா:


புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் ஏற்கனவே அறிவித்துவிட்டன. அவர்கள் சேர்ந்து கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், "குடியரசு தலைவர் முர்முவை முற்றிலுமாக புறக்கணித்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை தானே திறந்து வைக்கும் பிரதமர் மோடியின் முடிவு நமது ஜனநாயகத்தின் மீதான பாரதூரமான அவமானம் மட்டுமன்றி நேரடியான தாக்குதலும் ஆகும்.


இந்த கண்ணியமற்ற செயல் குடியரசு தலைவர் உயர் பதவியை அவமதித்து, அரசியலமைப்பின் மதிப்பையும் மீறுகிறது. முதல் பெண் பழங்குடியின குடியரசு தலைவரை தேசம் கண்டுள்ள நிலையில், அனைவரையும் உள்ளடக்கிய மனநிலையை இது சீரழிக்கிறது.


எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு:


நாடாளுமன்றத்தை இடையறாது குழிதோண்டிப் புதைத்த பிரதமருக்கு ஜனநாயக விரோதச் செயல்கள் புதிதல்ல. இந்திய மக்களின் பிரச்னைகளை எழுப்பிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, இடைநீக்கம் செய்யப்பட்டு, முடக்கி வைக்கப்பட்டுள்ளனர்" என எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. எதிர்க்கட்சிகளின் முடிவு, ஜனநாயக நெறிமுறைகளின் மீதான தாக்குதல் என பாஜக விமர்சித்துள்ளது.


இந்நிலையில், தேசிய நலன் கருதி புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை கொண்டாட முடிவு செய்திருப்பதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல் தெரிவித்துள்ளார்.


அதிர்ச்சி கொடுத்த கமல்:


இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்காததால் நாட்டின் பெருமிதம் அரசியல் ரீதியாக பிளவுபட்டுள்ளது. பிரதமரிடம் ஒரு எளிய கேள்வி கேட்கிறேன். திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ஏன் கலந்து கொள்ளக் கூடாது என்பதை நாட்டிற்குச் சொல்ல வேண்டும்.


இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் இந்தியக் குடியரசுத் தலைவர் ஏன் பங்கேற்கக் கூடாது என்பதற்கான காரணத்தை நான் காணவில்லை.
நாடாளுமன்றத்தின் புதிய வீட்டில் அதன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வசிக்க வேண்டும். 


தேசிய நலன் கருதி புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை உங்களுடன் கொண்டாட முடிவு செய்துள்ள அதே நேரத்தில் அதற்கு குடியரசு தலைவரை அழைக்காததற்கும் திறப்பு விழா விவகாரத்தில் எதிர்க்கட்சியை இணைத்து கொள்ளததற்கும் என் எதிர்ப்பை பதிவு செய்கிறேன். ஜனநாயகத்தை நான் நம்புகிறேன். எனவே, நிகழ்வைப் புறக்கணித்துள்ள எதிர்க்கட்சிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.






தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கமல்ஹாசன் ‘தி கேரள ஸ்டோரி’ பற்றி பேசினார். அப்போது பேசிய அவர், “வெறுப்பு பிரச்சார படங்களை எதிர்ப்பவன் நான். உண்மை கதையின் அடிப்படையில் படத்தை எடுத்தால் மட்டும் போதாது. அது உண்மையாக இருக்க வேண்டும். ஆனால், தி கேரளா ஸ்டோரி கதை உண்மையான கதையல்ல” என்று தெரிவித்தார்.