அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்குவங்கம், பீகாருக்கு அடுத்தப்படியாக அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட மாநிலமாக உள்ளது. இதனால், மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு தமிழ்நாடு எப்போதும் முக்கிய பங்காற்றி வந்துள்ளது. 


தி.மு.க.வுடன் கைக்கோர்த்த கமல்:


ஆனால், கடந்த 2014ஆம் ஆண்டுக்கு பிறகு, தமிழ்நாட்டின் செல்வாக்கு வெகுவாக குறைந்துள்ளது. தென்மாநிலங்களில் குறிப்பிடத்தகுந்த வெற்றியை பெறாவிட்டாலும் வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் பெரிய வெற்றியை பதிவு செய்ததால் பாஜக எளிதாக ஆட்சி அமைத்தது.


ஆனால், இம்முறை ஆட்சிக்கு எதிரான மனநிலை, விலைவாசி உயர்வு ஆகிய காரணங்களால் வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் கடந்த முறை பெற்றது போல எளிதான வெற்றியை பா.ஜ.க.வால் பெற முடியாது என கருதப்படுகிறது. எனவே, வட மாநிலங்களில் பெறும் தோல்வியை தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வெற்றிபெறுவது மூலம் ஈடுகட்ட பாஜக முயற்சித்து வருகிறது.


ஆனால், அதற்கு திமுக தலைமையிலான கூட்டணி பெரும் சவாலாக உள்ளது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி என பலமான கூட்டணியை கொண்டுள்ளது. 


தி.மு.க.- மக்கள் நீதிமய்யம் கூட்டணி:


மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், தி.மு.க. தனது கூட்டணியை மேலும் பலப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. அந்த வகையில், தி.மு.க. கூட்டணியில் கமலின்  மக்கள் நீதி மய்யம் கட்சியும் இணைந்துள்ளது. அக்கட்சிக்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் தேர்தலில், திமுக கூட்டணிக்காக கமல்ஹாசன் பரப்புரை செய்ய உள்ளார்.


ஆனால், தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததற்கு கமல்ஹாசன் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. கடந்த காலத்தில் திமுகவை விமர்சித்துவிட்டு அக்கட்சியுடனே கூட்டணி வைக்கலாமா? என விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


கூட்டணி வைத்தது ஏன்?


இந்த நிலையில், திமுகவுடன் கூட்டணி வைத்தது ஏன் என மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல் பரபரப்பு விளக்கம் அளித்துள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "இந்த நிலை என்பது ஒரு அவசர நிலை. இது தமிழ்நாட்டுக்கும் தேசத்திற்கும் பயன் உள்ளதாக அமைய வேண்டும். எதிர்வாத சக்திகளுக்கு இது கைகூடி விடக்கூடாது என்பதற்காக எடுத்திருக்கும் முடிவு. இந்த நேரத்தில் அனைவருமே சகோதரர்கள்தான். எந்த கட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் என்னுடைய சகோதரர்கள்தான். இந்தியாவின் பன்முகத்தன்மை நம்மை தனித்துவமாக்குகிறது.


தேச நலன் என வரும்போது, சிறிய வேறுபாடுகளை தியாகம் செய்ய தயார். தேசத்திற்காக நாம் அனைவரும் ஒரே மேடையில் அமர வேண்டும். அதுதான் என்னுடைய அரசியல்" என பேசியுள்ளார்.