Major Radhika Sen: இந்திய இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ராதிகா சென்,  2023-ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகளின் இராணுவ பாலின வழக்கறிஞருக்கான விருது பெற்றுள்ளார்.


மேஜர் ராதிகா சென்னிற்கு ஐ.நா., விருது:


இந்திய ராணுவத்தின் மேஜர் ராதிகா சென் 2023 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகளின் ராணுவ பாலின செயல்பாட்டிற்கான விருது பெற்றுள்ளார். ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் நடவடிக்கைகளில், பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றில் அவர் ஆற்றிய சிறந்த பங்களிப்பை அங்கீகரித்து இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதனை ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டாரெஸ் வழங்க, ராதிகா சென் பெற்றுக்கொண்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.






ராதிகா சென் பெருமிதம்:


விருது தொடர்பாக பேசிய ராதிகா சென்,”இந்த விருது எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது, ஏனெனில்,  யுனெஸ்கோவின் சவாலான சூழலில் பணிபுரியும் அமைதி காக்கும் படையினர்  அனைவரின் கடின உழைப்பையும் இது அங்கீகரிக்கிறது” என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இந்திய ராணுவம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள டிவிட்டர் பதிவில், ராதிகா சென்னின் அர்ப்பணிப்பு மற்றும் தைரியம், சிறந்த உலகத்தை நோக்கி பங்களிப்பதில் பெண் அமைதிப்படைகளின் விலைமதிப்பற்ற பங்கை எடுத்துக்காட்டுகிறது. உலகெங்கிலும் உள்ள இந்திய அமைதிப்படைகளின் அர்ப்பணிப்பு மற்றும் இரக்கத்தின் நெறிமுறைகளையே அவர் உண்மையில் உள்ளடக்குகிறார்” என குறிப்பிட்டுள்ளது.






யார் இந்த ராதிகா சென்?


இமாச்சலப் பிரதேசத்தில் பிறந்த ராதிகா சென் ஆரம்பத்தில் பயோடெக்னாலஜி இன்ஜினியரிங் தொழிலைத் தொடர்ந்தார்.  ​மும்பையில் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் முதுகலைப் படிப்பை மேற்கொண்டபோது, இந்திய ராணுவத்தில் சேரும் முடிவை எடுத்தார். அதன்படி, ராணுவத்தில் சேர்ந்த வர்  2023 இல் MONUSCO (காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஐக்கிய நாடுகளின் அமைப்பு உறுதிப்படுத்தல் பணி) க்கு நியமிக்கப்பட்டார். அவர் ஏப்ரல் 2024 வரை இந்திய விரைவு வரிசைப்படுத்தல் பட்டாலியனுடன் எங்கேஜ்மெண்ட் படைப்பிரிவு தளபதியாக பணியாற்றினார்.


சாதித்தது என்ன?


ஐ.நா. அமைதி காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்ட 6,063 இந்தியப் பணியாளர்களில், ராதிகா சென் MONUSCO க்குள் 1,954 நபர்களுடன் இணைந்து பணியாற்றினார். அவர்களில் 32 பேர் பெண்கள். அவரது பணி பெண்கள் ஒன்றிணைவதற்கும் பிரச்னைகளைப் பற்றி விவாதிப்பதற்கும் பாதுகாப்பான இடங்களை உருவாக்குவதாகும். கிழக்கு காங்கோ ஜனநாயகக் குடியரசில் (டிஆர்சி) பாலின சமத்துவத்தை மையமாகக் கொண்டு அமைதி காக்கும் முயற்சிகளுக்கு ராதிகா தலைமை தாங்கினார். குழந்தைகளுக்கான ஆங்கில வகுப்புகள் மற்றும் பெரியவர்களுக்கு உடல்நலம் மற்றும் தொழில் பயிற்சி போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார். வடக்கு கிவுவில் மோதல்களால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவுவதற்காக சமூக எச்சரிக்கை நெட்வொர்க்குகளையும் நிறுவினார்.


ராதிகா சென்னிற்கு கிடைத்த கவுரவம்:


ஆண்டின் சிறந்த ராணுவ பாலின வழக்கறிஞருக்கான விருதை பெற்ற, இரண்டாவது இந்திய அமைதி காக்கும் படையை சேர்ந்த நபர் ராதிகா சென் ஆவார். அவருக்கு முன்னதாக, கடந்த 2019ம் ஆண்டு மேஜர் சுமன் கவானி தெற்கு சூடானில் உள்ள ஐ.நா தூதரகத்துடன் இணைந்து ஆற்றிய தனது சேவைக்காக இந்த விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.