மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள காம்பியா நாட்டில் 66 குழந்தைகள் மரணம் அடைந்ததற்கு ஹரியானாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மற்றும் சளி மருந்தை உட் கொண்டது காரணமாக இருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருந்தது. இந்திய அரசு இதுகுறித்த விசாரணையை தொடங்கி இருக்கிறது.


கடந்த செப்டம்பர் 29 அன்று, சர்ச்சைக்குரிய இருமல் மருந்து குறித்து இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு (DCGI) உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்ததாக சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


இந்த இருமல் மருந்து ஹரியானாவின் சோனேபட்டில் உள்ள மெய்டன் பார்மாசூட்டிகல் லிமிடெட் மூலம் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது கிடைத்த தகவலின்படி, நிறுவனம் இந்த மருந்துகளை காம்பியாவிற்கு மட்டுமே ஏற்றுமதி செய்ததாக தெரிகிறது. 


இந்நிலையில், மெய்டன் பார்மாசூட்டிகல் நிறுவனம், இந்த தவறை தொடர்ந்து செய்து வந்தது தெரிய வந்துள்ளது. இந்த மருந்து நிறுவனத்தின் பல மருந்துகள், நான்கு மாநிலங்கள் நிர்ணயித்த தர நிலையில் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக, 2011ஆம் ஆண்டு, வியட்நாம் இந்த நிறுவனத்தை தடை செய்துள்ளது.


இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த பொது சுகாதார ஆர்வலர், "இந்த நிறுவனம் தரக் கட்டுப்பாட்டில் கடுமையாக இல்லாததைக் கண்டேன். இந்தியாவில் ஒழுங்குமுறை அமைப்பு என்பதே இல்லை. மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) எனப்படும் மத்திய கட்டுப்பாட்டாளர் உள்ளது.


ஆனால், ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் சொந்த ஒழுங்குமுறை அமைப்பு உள்ளது. ஆராய்ச்சியின் போது, ​​கேரளா மற்றும் குஜராத்தில் உள்ள கட்டுப்பாட்டாளர்கள் மெய்டன் நிறுவனத்தின் மருந்துகள் தரமற்றவை என்று கூறியதைக் கண்டறிந்தோம். பீகாரின் பொது கொள்முதல் நிறுவனமும் இந்நிறுவனத்தின் இருமல் மருந்தை தடுப்புப்பட்டியலில் சேர்த்துள்ளது" என்றார்.


குற்றச்சாட்டுகளுக்கு மெய்டன் பார்மாசூட்டிகல் நிறுவனம் இன்னும் பதிலளிக்கவில்லை. டெல்லியின் பீடம்புராவில் உள்ள நிறுவனத்தின் நிர்வாக அலுவலகம் இன்று காலை மூடப்பட்டது.
 
இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு ட்விட்டர் பக்கத்தில், "காம்பியாவில் அடையாளம் காணப்பட்ட நான்கு அசுத்தமான மருந்துகள் குறித்து உலக சுகாதார அமைப்பு இன்று மருத்துவ தயாரிப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. கடுமையான சிறுநீரக பிரச்னை ஏற்படுவதற்கும் 66 குழந்தைகள் உயரிழந்ததற்கும் அதற்கும் தொடர்பு இருக்கலாம். 


இந்த அசுத்தமான மருந்து பொருள்கள் இதுவரை காம்பியாவில் மட்டுமே கண்டறியப்பட்டாலும், அவை மற்ற நாடுகளுக்கு விநியோகிக்கப்பட்டிருக்கலாம். நோயாளிகளுக்கு மேலும் தீங்கு விளைவிப்பதைத் தடுக்க அனைத்து நாடுகளும் இந்த தயாரிப்புகளைக் கண்டறிந்து அவற்றை புழக்கத்தில் இருந்து அகற்றுவதை உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது.


நான்கு மருந்துகளில் ஒவ்வொன்றின் மாதிரிகளையும் ஆய்வக பரிசோதனை செய்ததில், அவற்றில் ஏற்றுக்கொள்ள முடியாத அளவு டைதிலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைகோல் ஆகியவை மாசுபாடுகளாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது" எனக் குறிப்பிட்டுள்ளது.