ஆளும் பாஜகவுக்கு எதிராக கேள்விகளை எழுப்பி, நாடாளுமன்றத்தை அதிர வைத்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா  சர்ச்சையில் சிக்கியுள்ளார். நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மற்றும் அதானி குழுமம் குறித்து  கேள்வி எழுப்புவதற்கு இவர் தொழிலதிபரிடம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்துள்ளது.


சர்ச்சையில் சிக்கிய மஹுவா மொய்த்ரா:


தன்னிடம் பணம் பெற்று கொண்டு, நாடாளுமன்றத்தில் மொய்த்ரா கேள்வி எழுப்பியதாக தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனி பகீர் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். அதானி குழுமத்துக்கு எதிராக கேள்விகளை கேட்பதற்காக தன்னிடம் ஆடம்பர பொருள்களை வாங்கி கொள்வார் என்றும் விடுமுறை நாள்களில் வெளிநாட்டுக்கு ட்ரிப் செல்வதற்காக உதவி கேட்பார் என்றும் மொய்த்ராவுக்கு எதிராக புகார் கூறியுள்ளார்.


மஹுவா மொய்த்ரா, லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என பாஜக எம்பி நிஷிகாந்த் துப, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பான ஆதாரங்களை நிஷிகாந்த் துபேவிடம் மொய்த்ராவின் முன்னாள் காதலரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான ஜெய் ஆனந்த் தேஹாத்ராய் வழங்கியதுடன் சிபியிடம் புகார் அளித்துள்ளார். தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளுக்கு மொய்த்ரா மறுப்பு தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க மக்களவை நெறிமுறைகள் குழு இன்று கூடியது. பாஜக எம்பியும் நெறிமுறைகள் குழு தலைவருமான வினோத் சங்கர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிஷிகாந்த் துபேவும் ஜெய் ஆனந்த் தேஹாத்ராயும் கலந்து கொண்டு வாக்குமூலம் அளித்தனர்.


நெறிமுறைகள் குழு எடுத்த அதிரடி முடிவு:


மொய்த்ராவுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் தீவிரமானவை என்பதை ஒப்பு கொண்ட நெறிமுறைகள் குழு, வரும் 31ஆம் தேதி ஆஜராகும்படி மொய்த்ராவுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.


கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த வினோத் சங்கர், "அடுத்தக்கட்ட விசாரணைக்காக இந்த வழக்கின் முக்கிய அம்சங்கள் குறித்த விவரங்களைக் கோரி தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது


ஜெய் ஆனந்த் தேஹாத்ராய் மற்றும் நிஷிகாந்த் துபே அளித்த வாக்குமூலத்தை கேட்டேன். குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, மஹுவா மொய்த்ராவை செவ்வாய்க்கிழமை அழைக்க முடிவு செய்துள்ளோம். அவர் வந்து தன் தரப்பு நியாயத்தை சொல்ல வேண்டும்" என்றார்.


நெறிமுறைகள் குழு கூட்டத்தில், தேஹாத்ராயிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது என்றும் தனது குற்றச்சாட்டுகள் தொடர்பாக துபே விளக்கமளிக்க அனுமதிக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. மொய்த்ரா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில், விதிகளை மீறியதாக அவர் நாடாளுமன்றத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்படலாம்.


இதையும் படிக்க: Watch Video: நேரலை நிகழ்ச்சியில் அடிதடி: பாஜக வேட்பாளரை கழுத்தை நெரித்த ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. - அதிர்ந்து போன மக்கள்!