தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் மகேஷ்பாபு. இவரது மூத்த சகோதரர் ரமேஷ்பாபு. இவரும் நடிகர் ஆவார். இவர்கள் இருவரும் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகராக வலம் வந்த கிருஷ்ணாவின் மகன்கள். இந்த நிலையில் 56 வயதான கட்டமானேனி ரமேஷ் பாபு கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவால் கடுமையாக அவதிப்பட்டு வந்தார்.




அவருக்கு கல்லீரல் தொடர்பான பாதிப்பு இருந்து வந்தது. தொடர்ந்து கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவரது உடல்நிலை நேற்று மிகவும் மோசமடைந்துள்ளது. உடனடியாக அவரது குடும்பத்தினர் அவரை கச்சிபவுலியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக கூறிவிட்டனர். இதையடுத்து, அவரது குடும்பத்தார் மிகுந்த அதிர்ச்சியிலும், வேதனையிலும் உள்ளனர்.


மகேஷ்பாபுவைப் போலவே ரமேஷ்பாபுவும் தெலுங்கு திரையுலகில் நடிகராக வலம் வந்தவர். 1974ம் ஆண்டு அவர் அல்லூரி சீதாராமராஜூ என்ற படம் மூலமாக திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர், 1987ம் ஆண்டு சாம்ராட் என்ற படம் மூலமாக நாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக நடித்தார்.




அவரது நா இல்லே நா சுவர்கம், அண்ணா செல்லேலூ, பச்சா தோரணம், முக்ரு கொடுக்குலு, சாம்ராட், சின்னி கிருஷ்ணுடு, கிருஷ்ணா காரி அப்பாயி, பஜார் ரவுடி, ப்ளாக் டைகர், ஆயுதம், கலியுக அபிமன்யு ஆகிய படங்கள் மாபெரும் வெற்றிப்படங்கள். இவை மட்டுமின்றி தனது தந்தை கிருஷ்ணா மற்றும் தம்பியும் சூப்பர் ஸ்டாருமான மகேஷ்பாபுவுடனும் இணைந்து சில படங்களில் நடித்துள்ளார். 1997ம் ஆண்டுக்கு பிறகு நடிப்பில் இருந்து ரமேஷ்பாபு ஒதுங்கிவிட்டார்.




அதன்பிறகு படத்தயாரிப்பில் ஈடுபடத் தொடங்கினார். அவர் தயாரித்த அர்ஜூன், அதிதி ஆகிய படங்கள் தெலுங்கில் ப்ளாக்பஸ்டர் திரைப்படங்களாக அமைந்தது. பிரபல நடிகரும், பிரபல தயாரிப்பாளருமாக வலம் வந்த ரமேஷ்பாபுவின் மறைவு டோலிவுட் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகேஷ்பாபுவிற்கும், ரமேஷ்பாபு குடும்பத்தாருக்கும் பிரபலங்களும், திரையுலகினரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.  நடிகர் கிருஷ்ணாவின் முதல் மனைவி இந்திராதேவிக்கு பிறந்தவர் ரமேஷ்பாபு. அவரது இரண்டாவது மனைவி விஜய் நிர்மலாவிற்கு பிறந்தவர் மகேஷ்பாபு என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண