Bharat Jodo Yatra : மகாராஷ்டிராவில் நடைபெற்று வரும் பாரத் ஜோடோ யாத்திரையின்போது ராகுல் காந்தியுடன்  கொள்ளுப் பேரன் துஷார் காந்தி (Tushar gandhi) கலந்து கொண்டு நடைப்பயணம் மேற்கொண்டார்.






காங்கிரஸ் கட்சியை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் ராகுல் காந்தி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை ’பாரத் ஜோடா யாத்திரை’ அதாவது ‘ஒற்றுமைப் பயணம்’ எனும் பேரில் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியில் தொடங்கி தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது மகாராஷ்டிரத்தில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.


ஒற்றுமைப் பயணம்:


மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசின் வகுப்புவாத அரசியலை எதிர்த்தும் மக்களிடம் உண்மையை எடுத்துச் சொல்லி நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்துவதாகவும் கூறி, கடந்த  செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாரத் ஜோடோ யாத்திரை எனும் ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார் ராகுல் காந்தி. கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரையில் 150 நாட்களில் 3,570 கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொண்டு காஷ்மீரை அடையும் ராகுல் காந்தி செல்லும் வழியெங்கும் மக்களை சந்திக்கத் திட்டமிட்டு, அதன்படி, தற்போது பயணித்து வருகிறார்.


12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக ராகுல் காந்தி செல்லும் ஒற்றுமை பயணத்தில் அரசியல் பொதுக்குழு கூட்டங்கள் எதையும் நடத்தப்போவதில்லை என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.. 60  நாட்களைக் கடந்துள்ள இந்த பயணம், தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரம், தெலுங்கானா வழியாக தற்போது மகாராஷ்டிராவில் பயணித்துக் கொண்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் நுழைந்த ராகுல்காந்திக்கும் அவருடன் தொடர்ந்து பயணிக்கும் நூற்றுக்கணக்கான  தொண்டர்களுக்கும், மகாராஷ்டிரா காங்கிரஸ் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.




 துஷார் காந்தி பங்கேற்பு:


மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி ‘ஒற்றுமைப் பயணத்தில்’ பங்கேற்க உள்ளதாக நேற்று அறிவித்திருந்தார். தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஜவஹர்லால் நேரு புகைப்படத்துடன், நான் ’பாரத் ஜோடா யாத்திரை'-யில் கலந்து கொள்ள போவதாக பதிவிட்டிருந்தார். அதன்படி, இன்று காலை ’பாலாப்பூர்’ (Balapur) பகுதியில் தொடங்கிய நடைப்பயணத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் கட்சிக்கும் ராகுல் காந்திக்கும் தனது ஆதரவினை தெரிவித்துள்ளார்.



காங்கிரஸின் வெகுஜன தொடர்பு முயற்சியான இந்த யாத்திரை, மகாராஷ்டிாவின் 14 நாள் பயணத்தில், 15 சட்டமன்ற மற்றும் 6 நாடாளுமன்ற தொகுதிகள் வழியாக  பயணிக்கிறது.  மகாராஷ்டிராவில் மட்டும் 382 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் காங்கிரஸின் ஒற்றுமை யாத்திரை வரும் 20 ஆம் தேதி மத்தியப் பிரதேசம் செல்கிறது.






மேலும் அந்த  மாநிலத்தில் கந்த்வா, இந்தூர், உஜ்ஜைன் மற்றும் அகர்-மால்வா வழியாகச் சுமார் 13 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டிசம்பர் 3-ஆம் தேதி ராஜஸ்தானை சென்றடைகிறது.