உலகம் முழுவதும் கொரோனாவிற்கு எதிரான போர் மிகத்தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இந்த சூழலில் இந்தியாவும் தனது பங்கிற்கு தொழில்நுட்ப உதவிகள் மூலம் மக்களுக்கு உதவி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் டிரோன்ஸ் என அழைக்கப்படும் ஆளில்லாத சிறிய வகை பறக்கும் விமானங்கள் மூலம் கொரோனா தடுப்பூசியை டெலிவரி செய்வதற்கான சோதனையை செய்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக ஆந்திர பகுதியில் மலைவாழ் கிராமத்திற்கு அடிப்படை மருந்து பொருட்களை ஏற்றிச்சென்று வெற்றிக்கண்டது . இந்நிலையில் இதே போல மகாராஸ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் தொலைத்தூர பகுதிகளுக்கு கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட அவசரகால மருந்துகளை எடுத்துச்செல்வதற்காக உருவாக்கப்பட்ட டிரோனின் சோதனை முயற்சி நடைபெற்றது.






மகாராஸ்டிரா மாநிலத்தில் போக்குவரத்து வசதிகள் குறைவாக உள்ள ஏராளமான கிராமங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்றான ஜவ்ஹர் பகுதிக்கு இந்த டிரோன் கொரோனா தடுப்பூசிகளை எடுத்துச்சென்றுள்ளது. முதற்கட்டமாக 300 கொரோனா தடுப்பூசிகள் டிரோன் மூலம் எடுத்துச்செல்லப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 10 நிமிடங்களில் அடைந்து சோதனை முயற்சி வெற்றையடைந்துள்ளது. டிரோன் புறப்பட்ட இடத்திலிருந்து நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கை அடைவதற்கு சாலை மார்க்கமாக 40 நிமிடங்கள் ஆகும். ஆனால் டிரோம் 10 நிமிடங்களில் மருத்துவமனையை சென்றடைந்திருப்பதால் அவசர காலங்களில் மருத்துவ உதவிகளில் டிரோன் முக்கிய பங்காற்றும் என்பது உறுதியாகியுள்ளது.


பால்கர் மாவட்டத்தின் தொலைதூரப் பகுதிகளுக்கு ட்ரோன்கள் மூலம் தடுப்பூசிகளை வெற்றிகரமாகக் கிடைக்கச் செய்ததற்காக பால்கர் மாவட்ட ஆட்சியர், சுகாதாரத் துறை மற்றும் ஊழியர்களுக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே வாழ்த்துத் தெரிவித்துள்ளார். பால்கர் மாவட்டம் ட்ரோன்கள் மூலம் தடுப்பூசிகளை எடுத்துச் செல்வது மருத்துவ உதவிகளை வழங்குவதற்கான முன்னோடி  என்றும் முதல்வர் பாராட்டியுள்ளார். எதிர்காலத்தில், இரத்தம் மற்றும் உறுப்புகளை வழங்குவதற்கும் இதனை பயன்படுத்த வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.  இது குறித்து அம்மாவட்ட ஆட்சியர்  டாக்டர் மாணிக் குர்சல் கூறும் பொழுது, "தடுப்பூசிகளைக் கொண்டு செல்ல ட்ரோன்களைப் பயன்படுத்துவதற்கான பைலட் திட்டம் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரிடம் (டிஜிசிஏ) சமர்ப்பிக்கப்பட்டது, அவர்கள் சில நாட்களுக்கு முன்பு ஒப்புதல் அளித்தனர், அதன் மூலம் செய்த சோதனையில் தற்போது நாங்கள் வெற்றி கண்டுள்ளோம் என தெரிவித்தார்.


இதே போல அம்மாவட்ட மருத்துவ அதிகாரியான மருத்துவர் தயானந்த் சூர்யவான்ஷி பேசிய போது, ‘இந்த திட்டத்தின் மூலம் தடுப்பூசி மையங்களுக்கு செல்ல முடியாத ஒவ்வொருவரின் வீடுகளுக்கும் கொரோனா தடுப்பூசியை கொண்டு செல்ல முடியும். மக்களுக்கு தடுப்பூசி மீது இருக்கும் தவறான எண்ணத்தையும் மாற்ற முடியும்’ என தெரிவித்தார்.