மகாராஷட்ரா மாநிலத்தில் அமைந்துள்ளது சோனுர்லி கிராமம். மும்பையில் இருந்து 450 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமம். இந்த கிராமத்தில் வனப்பகுதி உள்ளது. இந்த நிலையில், இந்த கிராமத்தில் உள்ள காட்டில் ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. பெண்ணின் அலறல் சத்தம் கேட்ட ஆடு மேய்ப்பவர் உடனடியாக கிராமத்தினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.


காட்டில் கட்டப்பட்டு கிடந்த அமெரிக்க பெண்:


தகவல் அறிந்து வந்த போலீசார் காட்டின் உள்ளே தேடிப்பார்த்தபோது வெளிநாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் மரத்தில் சங்கிலியால் கட்டப்பட்டு இருந்தார். இதைக்கண்ட போலீசாரும், உடன் சென்றவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த பெண்ணின் சங்கிலியை அவிழ்த்தனர். மிகவும் சோர்வாக காணப்பட்ட அந்த பெண்ணை அவர்கள் மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர்.


அந்த பெண்ணின் அருகே அமெரிக்க பாஸ்போர்ட்டும், ஆதார் கார்டும் இருந்தது. ஆதார் கார்டில் தமிழ்நாட்டின் முகவரி இருந்தது. அமெரிக்க பாஸ்போர்ட், தமிழ்நாட்டு முகவரியில் ஆதார் அட்டை இருந்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பெண்ணை உள்ளூர் மருத்துவமனையில் இருந்து கோவா மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.


தமிழ்நாடு முகவரி:


போலீசார் விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் லலிதாகாயி என்று தெரிய வந்துள்ளது. அவரது அமெரிக்க பாஸ்போர்ட்டை வைத்து விசாரணை மேற்கொண்டதில் அவரது பாஸ்போர்ட் மற்றும் விசா காலாவதியாகியது தெரியவந்தது.


இந்த சம்பவம் தொடர்பாக லலிதாகாயி போலீசாரிடம் அளித்த தகவலில், தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும், 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டிலே இருப்பதாகவும், தனது கணவர் ஊசியை போட்டு இவ்வாறு காட்டின் உள்ளே சங்கிலியால் கட்டிப்போட்டுவிட்டுச் சென்றதாகவும், கடந்த 40 நாட்களாக தான் இவ்வாறு கட்டப்பட்டு கிடப்பதாகவும் அவர் போலீசிடம் வாக்குமூலம் அளித்தார். அவரை காப்பாற்றிய இடத்தில் இருந்து ரேசன் கார்டு ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


தீவிர விசாரணை:


காட்டில் இருந்து காப்பாற்றப்பட்ட பெண் அமெரிக்காவைச் சேர்ந்தவர் என்பதால் அமெரிக்க அதிகாரிகளுக்கு இதுதொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க தமிழ்நாட்டிற்கும், கோவாவிற்கும் சென்றுள்ளனர். மேலும், இந்தியாவில் உள்ள அந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் அவரது கணவரின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மகாராஷ்ட்ராவின் கிராமப்புறத்தில் உள்ள காட்டுப்பகுதியில் அமெரிக்க பெண் மரத்தில் சங்கிலியால் கட்டப்பட்டிருந்ததும், அவரது ஆதார் அட்டையில் தமிழ்நாடு முகவரி இருந்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.