Wayanad Landslide: கேரள மாநிலம் வயநாடு முண்டகை சூரல்மலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வயநாட்டில் பெரும் நிலச்சரிவு:
அதிகாலை இரண்டு மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. பின்னர், 4.10 மணியளவில் மணியளவில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டதாகத் கூறப்படுகிறது. வைத்திரி தாலுக்கா, வெள்ளேரிமலை கிராமம், மேப்பாடி பஞ்சாயத்தில் விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து அப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. சூரல்மலையிலிருந்து முண்டகை வரையிலான சாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ”சாலையில் விழுந்த மரங்கள் மற்றும் மண் காரணமாக சம்பவ இடத்திற்கு செல்வதில் சிரமம் உள்ளது. மின்சாரம் இல்லாததால் மீட்பு பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புல்டோசர் மூலம் சாலையில் உள்ள மண்ணை அகற்றும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்டத்திற்கு கூடுதல் என்டிஆர்எஃப் குழு அனுப்பப்பட்டுள்ளது. கண்ணூர் பாதுகாப்புப் படையின் இரண்டு குழுக்கள் வயநாடு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து மீட்பு குழுவினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வருகின்றனர். பல இடங்களில் சாலைகள், பாலங்கள் இடிந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அதனால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது” என குறிப்பிடுகின்றனர். மண் சரிவில் 500 வீடுகள் மற்றும் சுமார் ஆயிரம் பேர் வரை சிக்கிக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, தேசிய சுகாதார இயக்கம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு தொடர்பாக தொடர்பாக 9656938689 மற்றும் 8086010833 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
உயிரிழப்பு:
மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், தற்போது வரை 47 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 50 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாலை இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், மீட்பு பணிகள் கடும் தொய்வைச் சந்தித்துள்ளன. இதன் காரணமாக ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஏராளமானோர் காணவில்லை என புகார் எழுந்துள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மீட்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க, விபத்து நடந்த சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கேரள மாநிலத்தில் ஏற்பட்ட அடுத்தடுத்த நிலச்சரிவுகளில் சிக்கி, சுமார் 121 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.