மகாராஷ்ட்ராவின் புனே மாவட்டத்தில் விமானப் படிப்புகளுக்கான கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் விமானியாவதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு விமானியாவதற்கு பயிற்சி எடுக்கும் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு குட்டி விமானங்களை இயக்குவதற்கான பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில், ஒருநபர் மட்டுமே இயக்கக்கூடிய சிறிய ரக விமானம் ஒன்றை பயிற்சி விமானியான பாவ்னா ரத்தோட் கல்லூரியில் இருந்து பயிற்சிக்காக இயக்கியுள்ளார். பாவ்னா ரத்தோட் இந்த விமானத்தை புனேவில் உள்ள பரமதி விமான நிலையத்தில் இருந்து இயக்கியுள்ளார். விமானம் மேலே எழும்பி நன்றாக பறந்து கொண்டிருந்த சூழலில், விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பாவ்னா ரத்தோடின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் சரியாக காலை 11.30 மணியளவில் இந்தாபூர்தேஷில் அருகே உள்ள கத்பன்வாடியில் கீழே விழுந்தது. சிறிய ரக விமானம் கீழே விழுந்த பகுதி விவசாய நிலமாக இருந்ததால் விமானத்தின் முன்பக்கம் மட்டுமே பலமாக சேதமடைந்தது. உள்ளே இருந்த பாவ்னா ரத்தோடுக்கு அதிர்ஷ்டவசமாக சிறய காயங்கள் மட்டுமே ஏற்பட்டது. அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.
விபத்தால் ஏற்பட்ட சத்தம் கேட்டு அந்த பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் பாவ்னா ரத்தோடை மீட்டு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர், பின்னர், அருகில் இருந்த மருத்துவமனையில் பயிற்சி விமானியான பாவ்னா ரத்தோட் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்திற்கான காரணம் இதுவரை முழுமையாக தெரியவில்லை. இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பயிற்சி விமானி ஓட்டிய விமானம் கீழே விழுந்து விபத்திற்குள்ளாகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்