ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ளது பாலசோர் பகுதி. இந்த பகுதியில் வசித்து வரும் நபர் தயாநிதி ஜெனா. இவருக்கு வயது 27. இவருக்கு திருமணமாகி தனது மனைவியுடன் வசித்து வருகிறார். ஜெனாவின் மனைவி அப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு டியூசன் எடுத்து வருகிறார்.


இந்த சூழ்நிலையில், அந்த பகுதியில் வசித்து வந்த 11ம் வகுப்பு மாணவி ஒருவர் ஜெனாவின் மனைவியிடம் படிப்பதற்காக டியூசன் வந்துள்ளார். தனது மனைவியிடம் டியூசன் வந்த மாணவி மீது ஜெனாவிற்கு காதல் வந்துள்ளது. இதையடுத்து, அந்த மாணவியிடம் ஜெனா தனது காதலை கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, ஜெனா மனைவியிடம் டியூசன் செல்வதையும் நிறுத்திவிட்டார். தன்னை வேண்டாம் என்று கூறிய அந்த மாணவியை பழிவாங்க ஜெனா துடித்துள்ளார்.




இந்த சூழலில், நேற்று அந்த மாணவி அப்பகுதியில் உள்ள கடைக்கு கலர்பென்சில் வாங்கச் சென்றுள்ளார். அப்போது, மாணவியை வழிமறித்த ஜெனா, அந்த 11ம் வகுப்பு சிறுமியை வலுக்கட்டாயப்படுத்தி ஆள் அரவமற்ற கழிவறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அந்த மாணவி தன்னை விட்டுவிடுமாறு கத்தியும் விடாத ஜெனா, தான் ஏற்கனவே தயாராக வைத்திருந்த மண்ணெண்ணெய்யை அந்த மாணவி மீது ஊற்றினார். மேலும், தான் தயாராக வைத்திருந்த லைட்டரையும் மாணவி மீது பற்ற வைத்தார்.


இதனால், உடலெங்கும் தீப்பரவிய மாணவி வலியில் அலறியுள்ளார். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதி மக்களும், ஜெனாவின் மனைவியும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் தீயை அணைத்து மாணவியை காப்பாற்ற முயற்சிப்பதற்குள் மாணவி முழுவதும் உடல் கருகி உயிரிழந்தார். இந்த கொடூர சம்பவத்தை செய்த ஜெனா, தான் கையில் வைத்திருந்த விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். ஆனாலும், அவரை அடித்து உதைத்த அப்பகுதி மக்கள் அங்கிருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதித்தனர்.




ஜெனா மீது 302, 294, 506 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெனா விரைவில் சிறையில் அடைக்கப்பட உள்ளான். 11ம் வகுப்பு மாணவியை திருமணம் ஆகிய நபர் காதலிக்க வற்புறுத்தி ஏற்க மறுத்ததால், அந்த மாணவியை அந்த வாலிபரே எரித்துக்கொன்ற சம்பவம் ஒடிசா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண