இந்தியாவின் முக்கியமான மாநிலமாக திகழ்வது மகாராஷ்ட்ரா. இந்த மாநிலத்தில் உள்ள 288 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த மாதம் 20ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பா.ஜ.க., ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது.
மகாராஷ்ட்ராவில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி:
இவர்களை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத்பவார் தலைமையிலான சிவசேனா ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தது. மகாராஷ்ட்ராவில் நடைபெற்று முடிந்த தேர்தலில் பா.ஜ.க. 132 தொகுதிகளில் வெற்றி பெற்று பெருவாரியான தொகுதிகளை கைப்பற்றியது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 57 தொகுதிகளை கைப்பற்றியது. அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 41 தொகுதிகளை கைப்பற்றியது.
யார் முதலமைச்சர்?
மகாராஷ்ட்ராவில் ஆட்சி அமைப்பதற்கு போதுமான தொகுதிகளை பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி கைப்பற்றியுள்ளது. ஆனாலும், ஆட்சி அமைப்பதற்கு தனிப்பெரும்பான்மையான தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றவில்லை. மகாராஷ்ட்ராவில் புதிய அரசு நாளை ஆட்சி அமைக்க உள்ளது. ஆனால், தற்போது வரை முதலமைச்சர் யார்? என்ற அறிவிப்பு வெளியாகவில்லை.
மகாராஷ்ட்ராவின் முதலமைச்சராக பொறுப்பு வகித்து வரும் ஏக்நாத் ஷிண்டே, ஏற்கனவே முதலமைச்சராக பொறுப்பு வகித்துள்ள தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அதேபோல, மறுபுறம் அஜித்பவாரும் முதலமைச்சர் நாற்காலிக்கு மல்லு கட்டி வருகிறார். ஷிண்டே தன்வசம் 57 எம்.எல்.ஏக்களை வைத்துள்ளதால் அவர் தான் முதலமைச்சராக வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அஜித்பவாரும் தன் வசம் 41 எம்.எல்.ஏ,க்கள் இருப்பதால் அவரும் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட்டு வருகிறார்.
இன்று அறிவிப்பு:
இந்த பரபரப்பான சூழலில், நேற்று தேவேந்திர பட்னாவிஸ் – ஏக்நாத் ஷிண்டே இடையே சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இந்த சந்திப்பில் இருவரும் முதலமைச்சர் பதவி குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது. நீண்ட நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் இருவரும் சுமூகமான ஒரு முடிவுக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.
மகாராஷ்ட்ராவின் முதலமைச்சர் யார்? என்பதை தீர்மானிப்பதற்காக மோடி, அமித்ஷா போன்ற பா.ஜ.க. தலைவர்கள் தீவிரமாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலை மகாராஷ்ட்ரா மாநிலத்தின் புதிய முதலமைச்சர் யார்? என்பது அறிவிக்கப்பட உள்ளது. தேவேந்திர பட்னாவிஸ் – ஏக்நாத் ஷிண்டே ஆகிய இருவர் இடையே ஒருவரே முதலமைச்சர் ஆவதற்கு வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது.
ஷிண்டே - அஜித்பவார் திட்டம்:
அதேசமயம், 132 எம்.எல்.ஏ.க்களை தங்கள் வசம் வைத்துள்ள பா.ஜ.க. முதலமைச்சர் தேர்வில் புதிய ட்விஸ்டை உருவாக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதேசமயம், சிவசேனாவை முழுவதும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர ஏக்நாத் ஷிண்டே இந்த முறையும் முதலமைச்சர் பதவியை அடைய விரும்புவார். அதனால், 57 எம்.எல்.ஏ.க்களை கொண்ட ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சர் பதவிக்காக பா.ஜ.க.வுக்கு ஏதேனும் நெருக்கடி அளிப்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இவர்கள் இருவரிடம் இருந்தும் முதலமைச்சர் பதவியை தட்டிப்பறிக்க அஜித் பவாரும் மறுமுனையில் முயற்சித்து வருகிறார். முதலமைச்சர் பதவி கிடைக்காவிட்டாலும் துணை முதலமைச்சராக அவர் தேர்வாக வாய்ப்புகள் அதிகளவு இருக்கிறது.