திடீரென செய்திகளும், புகைப்படங்களும் ஆன்லைனில் வைரலாவது புதிதல்ல. ஆனால், அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்வது தான் தினம் தினம் கிடைக்கும் புதிய டாஸ்க்.
அப்படி இன்று கிடைத்த டாஸ்க், பிரதமர் மோடிக்கு மகாராஷ்டிரா எம்.பி. விகே பாட்டீலின் மகள் மெயில் அனுப்பினாரா? அந்த மெயிலைப் பார்த்து பிரதமர் சந்திப்புக்கு நேரம் ஒதுக்கினாரா என்பதுதான்.
ராதாகிருஷ்ண விகே பாட்டீல் குடும்பத்தினரின் டெல்லி விசிட்..
மகாராஷ்டிரா அரசியல் தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீலின் பேத்தியும், அகமதுநகர் பாஜக எம்.பி. சுஜய் விகே பாட்டீலின் மகளுமான 10 வயது சிறுமி அனிஷா பாட்டீல் பிரதமர் மோடியை சந்தித்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக, விகே பாட்டீலின் குடும்பத்தினரை பிரதமர் மோடி இன்று சந்தித்தார். கொரோனா இரண்டாவது அலையின் போது மகாராஷ்டிராவின் அகமது நகரில் அவரது குடும்பத்தினர் இணைந்து மேற்கொண்ட கொரோனா தடுப்புப் பணிகளைப் பாராட்டும் விதமாக இந்த சந்திப்பு நடந்தது. அப்போது ராதாகிருஷ்ண பாட்டீலின் 10 வயது பேத்தி அனிஷா பாட்டீல் பிரதமருடன் மிகவும் நெருங்கிப் பேசி, விளையாடினார். பிரதமரும் குழந்தையை அரவணைத்துப் பேசினார். பிரதமரும், குழந்தையும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிறுமி மெயில் அனுப்பினாரா?
சில ஊடகங்களில் அந்தச் சிறுமி, பிரதமரை சந்திக்க வேண்டி இமெயில் அனுப்பியதாகவும். அதன் நிமித்தமாகவே இந்த சந்திப்பு ஏற்பாடானதாகவும் கூறப்பட்டது.
ஒரு செய்தித்தளத்தில், சிறுமி நீண்ட நாட்களாகவே தனது தந்தையின் பிரதமர் மோடியை நேரில் சந்திக்கவேண்டும் என்று நச்சரித்து வந்துள்ளார். ஆனால், தந்தையோ பிரதமரை சந்திப்பது அவ்வளவு எளிதல்ல எனக் கூறியுள்ளார். இதனால், ஒருநாள் சிறுமி, தனது தந்தையின் லேப்டாப்பில் இருந்து பிரதமருக்கு மெயில் அனுப்பியுள்ளார். அந்த மின்னஞ்சலில் "ஹலோ சார், நான் அனிஷா, உங்களை நேரில் சந்திக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்ததாகவும் அதற்குப் பிரதமர் "விரைந்து வரவும்" என்று பதில் அனுப்பியதாகவும் செய்தி வெளியானது. ஆனால், அந்த செய்தி போலியானது என்பது தற்போது உறுதியாகியுள்ளது.
இந்த சந்திப்பு முழுக்க முழுக்க விகே பாட்டீல் குடும்பத்தின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாகவே நடந்துள்ளது உறுதியாகியுள்ளது.
கடைசியாக சிறுமி கிளம்பும்போது, குஜராத்தைச் சேர்ந்த நீங்கள் இந்நாட்டின் குடியரசுத் தலைவர் ஆவீர்களா என சிறுமி கேட்க பிரதமர் பலமாக சிரித்துவிட்டாராம். சிறுமி அனிஷாவும் பிரதமர் மோடியும் தங்களின் சந்திப்பின்போது படிப்பு, விளையாட்டு, தனிப்பட்ட விருப்பங்கள் பற்றி பேசினர்.