இந்த மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாதத்தின் தொடக்கத்திலோ நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் 1 மாதம் கூட இல்லாத நிலையில், அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.


இறங்கி அடிக்கும் I.N.D.I.A கூட்டணி:


அதே சமயத்தில், பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்ற எதிர்க்கட்சிகள் அடங்கிய I.N.D.I.A கூட்டணி தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. I.N.D.I.A கூட்டணியில் இடம்பெற்றுள்ள சமாஜ்வாதி, ஆம் ஆத்மி கட்சிகளுடன் காங்கிரஸ், சமீபத்தில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்தது.


அதன்படி, உத்தர பிரதேசத்தில் 80 தொகுதிகளில் 17 இடங்களில் காங்கிரஸ் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 63 இடங்களில் சமாஜ்வாதி கட்சி போட்டியிட உள்ளது. 


அதேபோல, டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளில் 4இல் ஆம் ஆத்மியும் 3இல் காங்கிரஸ் கட்சியும் போட்டியிட உள்ளது. குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளில் காங்கிரஸ் 24 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 2 தொகுதிகளிலும் ஹரியானாவில் உள்ள 10 தொகுதிகளில் காங்கிரஸ் 9 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 1 தொகுதியிலும் போட்டியிட உள்ளது. கோவாவில் உள்ள 2 தொகுதிகளிலும் சண்டிகரில் உள்ள 1 தொகுதியிலும் காங்கிரஸ் போட்டியிட உள்ளது.


மகாராஷ்டிரா டீல் ரெடி:


மகாராஷ்டிராவில் தொகுதி பங்கீட்டை அறிவிப்பதில் தொடர் இழுபறி நீடித்து வந்த நிலையில், தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு, அது இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 20 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி 18 தொகுதிகளிலும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 10 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இன்னும் 48 மணி நேரத்தில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.


சிவசேனா கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 20 தொகுதிகளில் இருந்து பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் ஆகாடி கட்சிக்கு 2 தொகுதிகள் உள் ஒதுக்கீடு செய்யப்படும் என கூறப்படுகிறது. சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளில் இருந்து சுயேட்சை வேட்பாளர் ராஜு ஷெட்டிக்கு 1 தொகுதி உள் ஒதுக்கீடு செய்யப்படும் என கூறப்படுகிறது.


தொகுதி பங்கீட்டில் பெரும் பிரச்னையை உண்டாக்கிய மும்பை நகரில் உள்ள 6 மக்களவை தொகுதிகளில் 4 தொகுதிகள் உத்தவ் தாக்கரே கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், ஒரு தொகுதியில் வஞ்சித் பகுஜன் ஆகாடி கட்சி போட்டியிடும் என கூறப்படுகிறது. 


மகாராஷ்டிராவை பொறுத்தவரையில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக உள்ளது. உத்தர பிரதேசத்திற்கு அடுத்தப்படியாக அதிக மக்களவை தொகுதிகள் கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. எனவே, பாஜகவை வீழ்த்த வேண்டுமானால், I.N.D.I.A கூட்டணி, இந்த மாநிலத்தில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும்.