அமெரிக்க அதிபர் ஜோ பைடனை போலவே பிரதமர் நரேந்திர மோடியும் ஞாபக மறதியால் அவதிப்பட்டு வருவதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கலாய்த்துள்ளார்.

வரும் நவம்பர் 20ஆம் தேதி, மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக உள்ள மகாராஷ்டிராவில் நடைபெற உள்ள தேர்தல் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

"மோடிக்கும் அந்த பிரச்னை இருக்கு"

ஆட்சியை தக்க வைக்க பாஜக தலைமையிலான கூட்டணியும் மக்களவை தேர்தலில் பெற்ற வெற்றியை தொடர வைக்க இந்தியா கூட்டணியும் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இந்த நிலையில், அமராவதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, பைடனை போன்று மோடிக்கும் ஞாபக மறதி இருப்பதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "மோடியின் உரையை கேட்டதாக என் சகோதரி என்னிடம் கூறினார். அந்த உரையில், நாம் எதைச் சொன்னாலும், மோடியும் அதையே திரும்பி சொல்வதாக அவர் கூறினார். எனக்கு தெரியாது. ஒருவேளை அவர் நினைவாற்றலை இழந்திருக்கலாம்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் எல்லாவற்றையும் மறந்துவிடுவார். பின்னால், இருந்து அவருக்கு நினைவுபடுத்த வேண்டியிருந்தது. உக்ரைன் அதிபர் வந்ததற்கு, ரஷிய அதிபர் புதின் வந்திருப்பதாக அமெரிக்க அதிபர் கூறினார். அவர் நினைவாற்றலை இழந்திருந்தார். அதேபோல நமது பிரதமரும் நினைவாற்றலை இழந்து நிற்கிறார்.

என்ன பேசினார் ராகுல் காந்தி? 

கடந்த ஓராண்டாக எனது உரைகளில் அரசியல் சாசனத்தை பாஜக தாக்கி வருகிறது என்று கூறி வருகிறேன். ஆனால், அரசியல் சாசனத்தை காங்கிரஸ் தாக்குகிறது என்று பிரதமர் மோடி கூறுகிறார். மக்கள் கோபமடைந்து வருவதை அறிந்த அவர், இப்போது அரசியல் சாசனத்தை தாக்குகிறேன் என்று கூறுகிறார்.

50 சதவீத இடஒதுக்கீட்டு வரம்பை காங்கிரஸும் இந்தியா கூட்டணியும் ரத்து செய்யும் என்றும் மக்களவையில் அவரிடம் தெரிவித்தேன். உங்கள் நினைவாற்றலை இழந்துவிட்டீர்கள் என்று நான் அவரிடம் சொன்னேன். ஆனால், அவர் இன்னும் ராகுல் காந்தி இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவர் என்று கூறி வருகிறார்.

நான் மோடியிடம் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தச் சொன்னேன். எத்தனை தலித்துகள், ஆதிவாசிகள், ஓபிசிக்கள் உள்ளனர் என்பதை நாடு அறிய வேண்டும். அடுத்த கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு நான் எதிரானவன் என்று சொல்கிறார்" என்றார்.