இந்தியாவில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. நாட்டையே உலுக்கிய நிர்பயா பாலியல் வன்கொடுமைக்கு பிறகும் அந்த கொடூர செயல் ஓய்ந்தபாடில்லை. 2020ஆம் ஆண்டைவிட 2021 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 63.3% அதிகரித்துள்ளதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.
அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு ஜூன் 15ஆம் தேதி வரை 580ஆக இருந்த பாலியல் வன்கொடுமை வழக்குகள் 43% அதிகரித்து இந்த ஆண்டு 833ஆகவும், பாலியல் வன்கொடுமைகள் 39% அதிகரித்து 733ல் இருந்து 1,022 ஆகவும், பெண்களை கடத்ததுல் 1,026ல் இருந்து 1,580 ஆகவும் தகவல்கள் கூறுகின்றன.
பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதோடு சிறுமிகளும் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது கொடூரத்தின் உச்சம். அதுவும் பள்ளிகளிலே அது சர்வசாதாரணமாக சமூகத்தின் மீதும், பள்ளிகள் மீதும் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் ஒருவித அச்சத்தோடே தங்களது பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர்.
சில நாள்களுக்கு முன்புகூட கோவை சின்மயா வித்யாலயாவில் 12ஆம் வகுப்பு படித்த மாணவிக்கு ஆசிரியர் உள்ளிட்ட சிலர் பாலியல் தொல்லை கொடுத்ததால் அவர் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். அதற்கும் முன்னதாக சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளியிலும் பாலியல் தொல்லை தொடர்பான புகார்கள் எழுந்தன.
மாணவிகளும், சிறுமிகளும் பாலியல் வன்கொடுமைக்கும், பாலியல் தொல்லைக்கும் ஆளாகின்றனர். அப்படிப்பட்ட கொடூரம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.மகாராஷ்டிராவில் சிறுமி ஒருவர் ஒரு போலீஸ்காரர் உள்பட 400 பேரால் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது இரண்டு மாதங்கள் கர்ப்பமாக இருக்கிறார்.
அதுமட்டுமின்றி தனது மனைவி இறந்தபிறகு சிறுமியின் தந்தை சிறுமிக்கு திருமணம் செய்துவைத்தார். அங்கு சிறுமியின் மாமனார் துன்புறுத்தியதால் தனது மாமியாருடன் தங்கிய அச்சிறுமி அதன் பிறகு வேலை தேடி அம்பேஜோகை நகருக்கு சென்றிருக்கிறார். அங்கும் அவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாரத் மாதா கி ஜெ என நாட்டை போற்றும்போதும் பெண்ணை துணைக்கு வைத்துக்கொள்ளும் இதே இந்தியாவில்தான் சிறுமியிலிருந்து மூதாட்டிவரை பாரபட்சமில்லாமல் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார்கள் என்பது இந்தியா தலைகுனிய வேண்டிய விஷயம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்