பாலியல் சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் பெரும்பாலும் பெண்கள் அணிந்து இருக்கும் உடை தொடர்பாகவே கருத்துகள் அதிகம் தெரிவிக்கப்படும். அதில் இருக்கும் ஆண்களை தவறை கணக்கில் எடுக்காமல் பெண் எதற்காக அந்த ஆடை அணிந்திருந்தார். எதற்காக தனியாக வெளியே வந்தார் என்பன போன்ற கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த கேள்விகள் முற்றிலும் தேவையில்லாத ஒன்றாக அமைந்து வருகிறது. இந்நிலையில் இதை உணர்த்தும் வகையில் ஒரு மருத்துவ கல்லூரி மாணவிகள் ஒரு முன்னெடுப்பை எடுத்துள்ளனர்.
அதன்படி கேரளாவிலுள்ள கோழிகோடு மருத்துவ கல்லூரி சார்பில் ஒரு விஷயம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பாலியல் தொடர்பான சம்பவங்களுக்கும் பெண்களின் உடைகளுக்கு சம்பந்தம் இல்லை என்பதை உணர்த்தும் வகையில் ஒரு போட்டோ ஷூட் சீரிஸ் இயக்கம் நடத்தப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தில் பங்கேற்கும் பெண்கள் தாங்கள் இதுவரை போட தயங்கி ஆடைகளை அணிந்து வர வேண்டும். அத்துடன் அடுத்தவர்கள் என்ன கூறுவார்கள் என்பதை நினைக்காமல் அவர்களுக்கு பிடித்த உடைகளை அணிந்து வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டோ ஷூட் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு பூங்காவில் நடத்தப்பட்டுள்ளது. அந்த போட்டோ ஷூட்டில் பல்வேறு பெண்கள் ஷார்ட்ஸ் உள்ளிட்ட ஆடைகளை அணிந்து போட்டோ எடுத்து கொண்டுள்ளனர். இந்த இயக்கத்தின் மூலம் ஆடைகள் காரணமாக பாலியல் சம்பவங்கள் நடைபெறுகின்றன என்பதை உடைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று கடந்த சில மாதங்களுக்கு What you are Wearing? என்ற பெயரில் ஐநா தலைமையகத்தில் ஒரு கண்காட்சி நடத்தப்பட்டது. அதில் பாலியல் சம்பவங்களால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் அந்த சமயத்தில் என்ன உடை அணிந்து இருந்தார்கள் என்பதை பறைசாற்றும் வகையில் படங்கள் அமைந்திருந்தன. அதைத் தொடர்ந்து தற்போது கேரளாவிலும் ஒரு போட்டோ ஷூட் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.