நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது. நடுவில் இடைவெளியுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறுகிறது. 


பட்ஜெட் கூட்டத்தொடர்:


குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில், பிப்ரவரி 1ம் தேதி, மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. அதானி விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.


எதிர்க்கட்சியினர் விமர்சனங்களுக்கு மக்களவையிலும் மாநிலங்களவையிலும் பிரதமர் மோடி பதில் அளித்துள்ள நிலையில், தற்போது கேள்வி நேரம் நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தில் மானிய கோரிக்கைகளுக்கு அந்தந்த துறை சார்ந்த மத்திய அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.


இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் குறித்து தமிழ்நாட்டு எம்பிக்கள் நேற்று மக்களவையில் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மதுரை எய்ம்ஸ் திட்டத்தில் எதிர்க்கட்சியினர் அரசியல் செய்து வருவதாக சரமாரி குற்றச்சாட்டு சுமத்தினார்.


மதுரை எய்ம்ஸ்:


மதுரை எய்ம்ஸ் குறித்து எதிர்கட்சியினர் தவறான தகவல்களை அளித்து வருவதாக கூறிய மத்திய அமைச்சர், "எய்மஸ் கல்லூரியில் மருத்துவ படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக 1,900 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது" என பதில் அளித்தார்.


மதுரையில் எய்ம்ஸ் தயாராகவில்லை என திமுக எம்பிக்கள் கூறியதற்கு, "சிலர் எல்லாவற்றிலும் அரசியல் செய்ய விரும்புகிறார்கள். ஆசிரியர்கள், உள்கட்டமைப்பு மற்றும் நோயாளிகள் இல்லாத மருத்துவக் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்ததால் அவர்கள் (எதிர்க்கட்சி எம்பிக்கள்) ஏன் இப்படி செய்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அதற்கான எதிர்வினைதான் இது" என மத்திய அமைச்சர் தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய அவர், "இத்தகைய சட்ட விரோத செயல்களை (நரேந்திர) மோடி அரசு அனுமதிக்காது. தவறிழைக்கும் மருத்துவக் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம்" என்றார்.


மிரட்டினாரா மத்திய அமைச்சர்?


இதனால் கோபமடைந்த திமுக எம்பி தயாநிதி மாறன், "இப்படி பேச இவர் யார்? அவர் எங்களை பிளாக்மெயில் செய்கிறார். எங்களை மிரட்டுகிறார்" என்றார்.


இதை தொடர்ந்து, மத்திய அமைச்சருக்கு ஆதரவாக பாஜக எம்பிக்கள் குரல் கொடுத்தனர். ஆனால், அவரின் கருத்துக்கு திமுக, காங்கிரஸ் எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அமளி தொடர்ந்ததால், சபாநாயகர் குறுக்கீட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்தார்.


மத்திய அமைச்சர் கருத்தின் சாராம்சம் குறித்து ஆய்வு செய்யப்படும் என சபாநாயகர் ஓம் பிர்லா உறுதி அளித்தார். இருப்பினும், திமுக, காங்கிரஸ் எம்பிக்கள் கோபத்தில் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.