மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் எம்ஜிஎம் மருத்துவக் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கல்லூரியில் ராகிங் கொடுமை நடப்பதாக அடிக்கடி காவல்துறையினருக்கு புகார்கள் வந்து கொண்டிருந்தன. கடந்த ஜுலை மாதம் முதலாம் ஆண்டில் சேர்ந்த எம்பிபிஎஸ் மாணவர்களை சீனியர் மாணவர்கள் ராகிங் செய்ததாக புகார் வந்தது.


இதுதொடர்பாக சான்யோகீதா கஞ்ச் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு பெண் போலீஸான ஷாலினி சவுகான் (24) விசாரணை நடத்த நியமிக்கப்பட்டார்.  ஷாலியின் தந்தையும் காவல்துறை அதிகாரியாக பணியாற்றினார். 2010ஆம் ஆண்டு அவரது தந்தை இறந்ததை தொடர்ந்து, அவரது தாயும் அடுத்த ஆண்டே இறந்துவிட்டார். ஆனாலும் மனம்தளராமல் B.com படித்து முடித்தார். பின்பு கடந்த பயிற்சி முடித்து போலீஸ் வேலையில் சேர்ந்தார்.


இந்த நிலையில், எம்ஜிஎம் மருத்துவ ராக்கிங் கொடுமைகள் நடைபெறுவதாக புகார் எழுந்தது. இதனால் ஷாலினி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். ஆனால் விசாரணையில் குற்றவாளிகள் யார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.   இதையடுத்து, உயரதிகாரிகளின் திட்டப்படி முதலாண்டு மருத்துவக் கல்லூரி மாணவி போல் கல்லூரிக்குள் மாறு வேடத்தில் நுழைந்தார். இளம் வயதான ஷாலினி. சுமார் 5 மாதம் மாணவி போலவே கல்லூரிக்குள் நுழைந்து சக மாணவர்கள் போல் இருந்தார். மாணவர் போல் நடித்து ராகிங் செய்த 11 மாணவர்களை அடையாளம் கண்டுபிடித்து, கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.


ஷாலினி மட்டுமல்லாமல், ஒரு பெண் போலீஸ் செவிலியர் போலவும், இரண்டு தலைமைக் காவலர்கள் கல்லூரி கேண்டீன் ஊழியர்கள் போலவும் வேடமிட்டு, ராகிங் கொடுமையில் ஈடுபட்ட சீனியர் மாணவர்களை கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.






இதுகுறித்து ஷாலினி கூறும் போது, "கடந்த 5 மாதங்களாக போலீஸ் என்று யாருக்கும் சந்தேகம் வராதபடி நடந்து கொண்டேன். அதன்பின்னர் முதலாண்டு மாணவ, மாணவிகளை ராகிங் செய்யும் சீனியர் மாணவர்களைக் கண்டறிந்தேன்" என்றார். இவரது முதல் வழக்கே வெற்றிகர மாக முடிந்ததால் உயரதிகாரிகள் ஷாலினியை பாராட்டி உள்ளனர்.


இதுகுறித்து சன்யோகிதகஞ்ச் காவல் நிலையப் பொறுப்பாளர் தெஹ்சீப் காஜி கூறுகையில் ”விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட மூத்த மாணவர்கள் தங்கள் ஜூனியர்களை சில ஆபாசமான செயல்களைச் செய்து ராகிங் செய்ததாகக் கூறப்படுகிறது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) தொடர்புடைய விதிகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


மேலும், அவர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறும் குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்படும்போது நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட மாணவர்களின் பட்டியலைப் பெற்ற பிறகு, கல்லூரி நிர்வாகம் அவர்களை கடந்த வாரம் உடனடியாக மூன்று மாதங்களுக்கு இடைநீக்கம் செய்தது" என்றார்.