மத்திய பிரதேசத்தில் ஒரு மக்களவை, 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் பிரச்சாரத்தில் ஆளும் பாஜகவும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸும் பரஸ்பரம் விமர்சனம் செய்து வருகின்றன. காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத்தின் (72) உடல்நிலையை சுட்டிக் காட்டி, அவரைவிட 10 வயது இளையவரான முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் விமர்சனம் செய்து வருகிறார். அதுமட்டுமின்றி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து அனல் பறக்கும் பிரச்சாரங்கள் செய்து வருவதால் அவர் சென்றுவர ஹெலிகாப்டரும் தரையிறங்கும் இடங்களுக்கு தற்காலிக ஹெலிப்பேடும் அமைத்து பிரச்சாரங்கள் அதிவேகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற வேளையில், அதற்காக அதிகம் பாடு படுவது காவல் துறையினராக தான் உள்ளனர். 



அப்படி மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண் காவல்துறை அதிகாரி தனது ஒன்றரை வயது மகளை குழந்தைகள் சுமக்கும் கேரியர் பையில் சுமந்து கொண்டு அலிராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஹெலிபேடில் முதல்வர் பாதுகாப்பு பணிக்காக வந்திருந்தார். மோனிகா சிங் என்று பெயர் கொண்டாந்த போலீஸ் அதிகாரி, மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு (டிஎஸ்பி) ஆக உள்ளார். இந்நிலையில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் ஹெலிகாப்டர் இறங்கும் ஹெலிபேடில் மோனிகா சிங் காவல் பணிக்காக நின்றுகொண்டிருந்தார். ஜோபாட் சட்டமன்ற தொகுதிக்கான வரவிருக்கும் இடைத்தேர்தலுக்கான இரண்டு நாள் பிரச்சாரத்திற்காக கடந்த செவ்வாய் கிழமை அன்று அலிராஜ்பூரை சென்ற மத்திய பிரதேச முதல்வர், அங்கு மோனிகா சிங் தனது பணிக்கான அர்ப்பணிப்பை காட்டும் விதத்தை அந்த இடத்திலேயே பாராட்டினார்.






அதுமட்டுமின்றி அவரை பாராட்டும் விதமாக ஒரு டீவீட்டையும் பதிவிட்டிருந்தார். "நான் அலிராஜ்பூருக்குச் சென்றபோது, ​​டிஎஸ்பி மோனிகா சிங் தனது ஒன்றரை வயது மகளை ஒரு குழந்தை கேரியர் பையில் சுமந்து கொண்டு பணியில் இருப்பதைப் பார்த்தேன். அவரது கடமைக்கான அவரது அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது. உங்களை நினைத்து மத்திய பிரதேசம் பெருமை கொள்கிறது. லாட்லி பிடியாவுக்கு அவருக்கு எனது வாழ்த்துக்களையும் ஆசிகளையும் அளிக்கிறேன்." என்று தனது டீவீட்டில் முதல்வர் சிவராஜ் சிங் சவ்ஹான் கூறியுள்ளார். "நான் ஒரு தாயாக பொறுப்பை நிறைவேற்ற வேண்டியிருந்தது, மேலும் எனது கடமையையும் (ஒரு காவல்துறை அதிகாரியாக) ஒன்றாகச் செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது, எனவே அதுவே சிறந்த யோசனையாக பட்டது, என் குழந்தையையும் கூடவே அழைத்து வந்தேன்" என்று அவர் கூறினார். ஒரு தாயாகவும் மற்றும் காவல்துறை அதிகாரியாகவும் மோனிகா சிங் தனது கடமைகளை சரியாக நிறைவேற்றியதற்காக சிலர் பாராட்டினாலும், மற்றவர்கள் ஒரு பெண் அதிகாரியை, அவராடு பெண் குழந்தையுடன் முதல்வர் இறங்கும் ஹெலிபேடில் அந்த வெயிலில் பணியில் நிற்கவைத்ததகற்காக மாநில அரசை கடுமையாக விமர்சித்தார்கள்.