காஸ்ட்லி மொபைல் போன் வாங்குவதற்காகவும் ஸ்டார் ஹோட்டலில் மூக்கைப் பிடிக்க சூப்பர் சாப்பாடு சாப்பிடுவதற்காகவும் ஒடிசாவைச் சேர்ந்த 17 வயதுச் சிறுவன் ஒருவன் கட்டியை மனைவியை வேறோருவருக்கு விற்ற சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஒடிசாவைச் சேர்ந்த 17 வயதுச் சிறுவன் ஒருவனுக்கு அதே மாநிலத்தைச் சேர்ந்த 26 வயது பெண்ணுக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடந்துள்ளது. திருமணம் ஆன பிறகு இருவரும் செங்கல் சூலையில் வேலை செய்வதற்காக ராஜஸ்தான் மாநிலத்துக்குச் சென்றுள்ளனர்.அங்கே தனது மனைவியுடன் ஒருமாதம் வாழ்ந்த அந்தப் 17 வயது சிறுவன் பணத்துக்காக வேண்டி 55 வயது நபருக்குத் தனது மனைவியை 1.8 லட்சம் ரூபாய் விலை பேசி விற்றுள்ளார். 




17 வயதுச் சிறுவனுக்கு நடந்த குழந்தைத் திருமணம் ஒருபக்கம் அதிர்ச்சி ஏற்படுத்தும் ரகமாக இருக்கிறது என்றால் மற்றொரு பக்கம் அந்தச் சிறுவன் திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே தனது மனைவியை விற்றது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


அங்கே தனது மனைவியை விற்ற பிறகு பணத்துடன் ஊருக்குத் திரும்பிய நபரிடம் மனைவி எங்கே என விசாரித்துள்ளனர். அதற்கு அந்த சிறுவன் தனது மனைவி தன்னை விட்டு ஓடிச் சென்றுவிட்டதாகத் தெரிவித்துள்ளான். இதனை நம்ப மறுத்த பெண்ணின் குடும்பத்தினர் ஒடிசா காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். ஒடிசா காவல்துறை ராஜஸ்தான் காவல்துறையின் உதவியுடன் அந்தப் பெண்ணைத் தேடியதில் பணத்துக்காகத் தனது மனைவியை இந்த நபர் விற்றது தெரிய வந்துள்ளது. மேலும், பணத்தைப் பெற்றுக்கொண்ட நபர் சொகுசு ஸ்மார்ட் போன் வாங்குவதிலும் அந்தப் பணத்தைச் செலவழித்துள்ளார். மீதமிருந்த பணத்தைக் கொண்டு ஸ்டார் ஹோட்டலில் தங்கிய நபர் கையில் இருந்த பணத்தைச் செலவழித்து ஹோட்டலின் உணவுகளை ஒருகை பார்த்துள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைத் திருமணம் தொடங்கி பல்வேறு சிக்கல்கள் இந்த விவகாரத்தில் இருப்பதால் தற்போது இந்த வழக்கை எப்படி அணுகுவது எனப் போலீஸார் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.  இதற்கிடையே தற்போது கைதுசெய்யப்பட்ட அந்தச் சிறுவன் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளான்.


 


முன்னதாக, கொரோனா பெருந்தொற்று காலத்தில் ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா மாநிலத்தில் சிறார் திருமணம் மற்றும் பெண்கள் கட்டாயத் திருமணம் குறித்த புகார்கள் அதிகரித்துள்ளன.  ஏப்ரல் 2020 – மே 2021 காலக்கட்டத்தில் மட்டுமே இந்த மாநிலங்களில் சிறார் திருமணம் 27 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதுகுறித்த விவரத்தை அந்த மாநில குழந்தைகள் பாதுகாப்புக் கமிஷன் வெளியிட்டுள்ளது. இதன் விளைவாக அதிக எண்ணிக்கையிலான பெண்கள் பள்ளி கல்லூரிகளுக்குச் செல்வது நிரந்தரமாகத் தடைபட்டது குறிப்பிடத்தக்கது..