திருமணத்தின் போது ஏற்பட்ட மின் வெட்டு காரணமாக மத்திய பிரதேசத்தில் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக பல்வேறு இடங்களில் மின் பற்றாக்குறை காரணமாக மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது. அந்தவகையில் ஒரு மின்வெட்டு சம்பவம் ஒரு திருமணத்தையே புரட்டி போட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் உஜ்ஜெயின் பகுதியில் ரமேஷ்லால் என்பவரின் இரு மகளுக்கும் ஒரே மேடையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றுள்ளது. அப்போது திருமணத்திற்கான அனைத்து சடங்குகளும் நடைபெற்று வந்தது. அந்த சமயத்தில் அப்பகுதியில் மின் வெட்டு ஏற்பட்டதாக தெரிகிறது.
அந்த மின்வெட்டு காரணமாக அந்த திருமண மண்டபம் சற்று இருட்டில் இருந்துள்ளது. அப்போது அக்கா மற்றும் தங்கை ஆகிய இருவரும் ஒரே நிறத்தில் ஆடை அணிந்துள்ளனர். இதன்காரணமாக அக்காவை திருமணம் செய்து கொள்ள இருந்த மணமகன் தவறுதலாக மாற்றி நின்ற தங்கையை திருமணம் செய்ததாக தெரிகிறது. அதேபோல் தங்கைக்கு பாத்திருந்த மாப்பிள்ளை மாற்றி நின்ற அக்காவை திருமணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் தங்களுடைய மாமியார் வீட்டிற்கு சென்ற பிறகு இந்த உண்மை தெரியவந்துள்ளது.
அதைத் தொடர்ந்து இவர்களுக்கு குடும்பத்தினர் மீண்டும் மாற்றி திருமண சடங்கை நடத்தியுள்ளதாக தெரிகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மின் வெட்டு சம்பவம் திருமணத்தில் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் அதிகபட்சமாக 201 ஜிகா வாட் மின் தேவை ஏற்பட்டது. அது வரும் மே-ஜூன் காலங்களில் 220 ஜிகா வாட்டாக அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. இதனால் மின் தயாரிப்பு மீண்டும் அதிகரிக்காமல் விட்டால் மின் வெட்டு ஏற்படும் நிலை ஏற்படும் என்று கருதப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்