மத்திய பிரதேசத்தில் இந்தாண்டின் இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2003ஆம் ஆண்டு முதல் இடையில் இரண்டு ஆண்டுகளை தவிர்த்து பா.ஜ.க. தொடர்ந்து ஆட்சி நடத்தி வருகிறது. அந்த மாநிலத்திற்கு சிவராஜ் சிங் சவுகான் முதலமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார். தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், அங்கு தேர்தல் களம் சூடிபிடித்துள்ளது. அந்த வகையில், ஆட்சியில் மேற்கொண்ட நல திட்டங்கள் குறித்து மக்களிடையே வழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விகாஸ் ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.


நிறுத்தப்பட்ட யாத்திரை:


செவ்வாய்க்கிழமை அன்று இந்த யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பொதுக்கூட்டம் ஒன்றில் மாநில அமைச்சர் பிரஜேந்திர சிங் யாதவ் மீது யாரோ அரிப்புப் பொடியை தூவியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, யாத்திரை நிறுத்தப்பட்டது.


அமைச்சர் பிரஜேந்திர சிங்கின் சட்டப்பேரவை தொகுதியான முங்காலியில் உள்ள ஒரு கிராமத்தின் வழியாக யாத்திரை சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மிக கடுமையாக அரிப்பு ஏற்பட்டதால், அமைச்சர் தனது குர்தாவை கழற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, பாட்டில் தண்ணீரை எடுத்து கழுவ நேரிட்டது.  பார்வையாளர்களில் சிலர் இந்த சம்வபத்தை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனனர். அது தற்போது வைரலாகி வருகிறது.


எம்எல்ஏவிடம் வாக்குவாதம்:


இரண்டு நாட்களுக்கு முன்பு, விகாஸ் ரத யாத்திரை கந்த்வா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, ​ சாலை மோசமாக இருந்ததால் யாத்திரை நிறுத்தப்பட்டது. இதனால், யாத்திரையை வழிநடத்திய உள்ளூர் பாஜக எம்.எல்.ஏ தேவேந்திர வர்மாவிற்கும் முன்னாள் கிராமத்தின் தலைவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.


இது தொடர்பாக வெளியான வீடியோவில், "3 கி.மீ. தூரத்திற்கு சாலையை போடுவதற்கு கூட அரசு அனுமதி வழங்காத சூழலில் இந்த யாத்திரை எதற்கு நடத்தப்பட வேண்டும்" என எம்எல்ஏவிடம் முன்னாள் கிராம தலைவர் கேள்வி எழுப்பியது பதிவாகியுள்ளது.


"காங்கிரஸை மோசமானதாகக் கருதினோம். ஆனால், நீங்கள் (பாஜக) காங்கிரஸை விட மோசமானவர்கள். எங்களுக்குச் சரியான சாலையைக் கொடுங்கள். இல்லையெனில் நாங்கள் உங்களுக்கு வாக்களிக்க மாட்டோம்" என ஒருவர் எம்எல்ஏவிடம் கேள்வி எழுப்பினார்.


இதற்கு திமிராக பதில் அளித்த எம்எல்ஏ, "வாக்களிக்க வேண்டாம். அது உங்கள் உரிமை" என பதில் அளித்துள்ளார்.


விகாஸ் யாத்திரையை மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஞாயிற்றுக்கிழமை இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார், இது பிப்ரவரி 25 வரை நடைபெற உள்ளது.


இதையும் படிங்க: Cow Hug Day: கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்.. பசு அணைப்பு தின அறிவிப்பை திரும்ப பெற்ற விலங்குகள் நல வாரியம்..!