Hindu Muslim Marriage: இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆணை இந்து மதத்தை சேர்ந்த பெண் திருமணம் செய்து கொள்வது முஸ்லிம் சட்டத்தின் கீழ் செல்லாது என மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 


சிறப்பு திருமண சட்டம், 1954இன் கீழ் தங்களின் கலப்பு திருமணத்தை (inter-faith marriage) பதிவு செய்து போலீஸ் பாதுகாப்பு வழங்க தம்பதியர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை ஏற்க மறுத்த நீதிமன்றம், இப்படிப்பட்ட கருத்தை தெரிவித்துள்ளது.


வழக்கின் பின்னணி என்ன? இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆணும் இந்து மதத்தை சேர்ந்த பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். ஆனால், அவர்களின் காதலை பெண்ணின் குடும்பத்தினர் எதிர்த்துள்ளனர். கலப்பு திருமணம் நடந்தால் சமூகம் தங்களை ஒதுக்கிவிடும் எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் இவர்கள் திருமணம் செய்ய விரும்பியுள்ளனர். திருமணத்திற்காக இருவரும் மதம் மாற விரும்பவில்லை. இந்த நிலையில், சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரியும் ம.பி. உயர் நீதிமன்றத்தில் தம்பதி மனு தாக்கல் செய்தனர்.


சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ், திருமணத்தை பதிவு செய்ய திருமண அதிகாரி முன் ஆஜராவதற்கு, தம்பதிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என தம்பதியின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.


நீதிமன்றம் கூறியது என்ன? தனிச் சட்டத்தின் கீழ் கலப்பு திருமணம் தடை செய்யப்பட்ட போதிலும் சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் அது செல்லும் என்றும் தம்பதி தரப்பு வழக்கறிஞர் வாதம் முன்வைத்தார். 


இந்த மனுவை விசாரித்த நீதிபதி குர்பால் சிங் அலுவாலியா, "முஸ்லீம் தனிச் சட்டத்தின் கீழ் நெருப்பை வழிபடும் பெண்ணுக்கும் முஸ்லீம் ஆணுக்கும் நடக்கும் திருமணம் செல்லாது. அவர்கள் சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்திருந்தாலும், முஸ்லீம் தனிச் சட்டத்தின் கீழ் அது ஒழுங்கற்ற திருமணமாக கருதப்படும்.


மத சடங்குகள் நடைபெறாத காரணத்தால் கலப்பு திருமணத்திற்கு (inter-faith marriage) எதிராக வழக்கு தொடர முடியாது என்றாலும் தனிச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டால் இம்மாதிரியான திருமணங்கள் சட்டப்பூர்வ திருமணமாக கருத முடியாது" என்றார்.


முகமது சலீம், சம்சுதீன் ஆகியோருக்கு இடையே நடந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடிப்படியாக வைத்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில்தான், முஸ்லிம் ஆணுக்கும் இந்து பெண்ணுக்கும் இடையே நடந்த திருமணத்தை ஒழுங்கற்ற திருமணம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.