ஒடிசா மக்களே பிஜூ ஜனதா தளத்தின் எதிர்காலத் தலைவர் யார் என்பதை தீர்மானிப்பார்கள். வி.கே.பாண்டியன் எனது அரசியல் வாரிசு கிடையாது என்று அந்த மாநில முதலமைச்சர் பிஜூ ஜனதா தளத்தின் தலைவர் நவீன் பட்நாயக் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
ஒடிசாவின் மிகவும் முக்கியமான தலைவராகவும், அந்த மாநிலத்தின் ஆளுங்கட்சியின் அடுத்த தலைவராகவும் கருதப்பட்டவர் வி.கே.பாண்டியன். இந்த சூழலில், திடீரென நவீன் பட்நாயக் இந்த கருத்தை தெரிவித்திருப்பது அந்த மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வி.கே.பாண்டியன் செல்வாக்கு:
ஒடிசாவில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து அந்த மாநில மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் வி.கே.பாண்டியன். தனது அபாரமான செயல்பாடுகளால் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் நம்பிக்கைக்குரிய நபராக மாறினார். முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் தனிச்செயலாளராக இருந்தவர் பின்னர், தனது பதவியை ராஜினாமா செய்து பிஜூ ஜனதா தளத்தில் இணைந்தார்.
10 ஆண்டுகள் பணி இருக்கும் சூழலில், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பிஜூ ஜனதா தளத்தில் இணைந்தவர் கட்சியில் அதிகாரமிக்க நபராக மாறினார். நவீன் பட்நாயக்கிற்கு அடுத்தபடியாக கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் இடத்தில் இருக்கும் வி.கே.பாண்டியன்தான் ஒடிசாவின் வருங்காலம் என்று அந்த பிஜூ ஜனதா தள முக்கிய தலைவர்களும், நிர்வாகிகளும் கூறி வருகின்றனர்.
அரசியல் வாரிசா?
இந்த சூழலில், அமித்ஷா ஒடிசாவை ஒரு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆளலாமா? என்று கேள்வி எழுப்பினார். அமித்ஷாவின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சூழலில், நவீன் பட்நாயக் இன்று வி.கே.பாண்டியன் தனது அரசியல் வாரிசு இல்லை என்று கூறியுள்ளார்.
நவீன் பட்நாயக் அளித்துள்ள பேட்டியில், இது அபத்தமானது. இது ஒரு பழைய குற்றச்சாட்டு. இதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அவர்களின் புகழ் குறைந்து வருவதால், அவர்கள் மேலும், மேலும் அவநம்பிக்கை அடைந்து வருவதையே நான் பார்க்கிறேன். பிஜூ ஜனதா தளத்தின் அடுத்த வரிசை மக்கள் முடிவு செய்வார்கள் என்று நான் பல முறை கூறியுள்ளேன். 27 ஆண்டுகளுக்கு முன்பு கட்சியின் தலைவர் பதவி எனக்கு வழங்கப்பட்டது. அன்றில் இருந்து அதை நான் தொடர்கிறேன்.”
இவ்வாறு அவர் கூறினார்.
அரசியல் பரபரப்பு:
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடந்து வரும் சூழலில், ஒடிசாவில் சட்டசபைத் தேர்தலும் இணைந்து நடந்து வருகிறது. நாளை மறுநாள் நடைபெற உள்ள கடைசி கட்ட வாக்குப்பதிவில் ஒடிசாவில் பல இடங்களில் சட்டசபைத் தேர்தலும், மக்களவைத் தேர்தலும் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி நவீன் பட்நாயக்கின் உடல் நிலை குறித்து பேசியதும், அமித்ஷா பேசியதும் அந்த மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில்தான் நவீன் பட்நாயக் பிஜூ ஜனதா தளத்தின் எதிர்காலம் குறித்தும், வி.கே.பாண்டியன் குறித்தும் பேசியுள்ளார்.
77 வயதான நவீன் பட்நாயக் வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நவீன் பட்நாயக் தேர்தல் பரப்புரையில் பங்கேற்றாலும் வி.கே.பாண்டியனே முழுமையாக தேர்தல் பரப்புரையை கண்காணித்து வந்தார்.