சமீப காலமாகவே, நீதிமன்றத்தின் பல தீர்ப்புகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் இந்தூர் கிளை, வழங்கிய தீர்ப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை 20 ஆண்டு கடுங்காவல் தண்டனையாக மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் இந்தூர் கிளை குறைத்துள்ளது.


"வழக்கு தொடர்ந்தவரை (பாதிக்கப்பட்ட சிறுமி) உயிருடன் விடும் அளவுக்கு அவர் (குற்றவாளி) கருணை படைத்தவர் என்பதை கருத்தில் கொண்டு ஆயுள் தண்டனை 20 ஆண்டு கடுங்காவல் கடுங்காவல் தண்டனையாக குறைக்கப்படுகிறது" என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


கடந்த 2009ஆம் ஆண்டு, கூடுதல் அமர்வு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக குற்றவாளியான ராமு மேல்முறையீடு செய்திருந்தார். அவருக்கு இந்தூர் கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியிருந்தது.


மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் சுபோத் அபியங்கர் மற்றும் சத்யேந்திர குமார் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, "2009ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பை ஓரளவு ஏற்று கொளகிறோம். மேல்முறையீடு செய்தவர் சட்டத்தின்படி 20 ஆண்டுகள் தண்டனை அனுபவிக்க வேண்டும்" என அக்டோபர் 18ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.


மருந்துகள் மற்றும் மூலிகைகள் விற்பனை செய்து வந்த ராம்சிங், 4 வயது சிறுமியை கூடாரத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தண்டனை பெற்றவர். நீதிமன்ற உத்தரவின்படி, மே 31, 2007 அன்று, ராம்சிங் ஒரு ரூபாய் தருவதாகக் கூறி சிறுமியை கூடாரத்திற்கு இழுத்து பாலியல் வன்கொடுமை செய்தார்.


ராம்சிங் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டதில் இருந்து அவர் ஏற்கனவே 15 ஆண்டுகள் சிறையில் இருந்ததாகவும், மேலும் அவரது தண்டனையை அவர் ஏற்கனவே அனுபவித்த தண்டனையில் இருந்து குறைக்கலாம் என்றும் அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதம் முன்வைத்தார்.


அரசு தரப்பு வழக்கறிஞர் ராம்சிங்கின் மனுவை எதிர்த்தார். அவர் மன்னிப்புக்கு தகுதியற்றவர் என்றும் வாதிட்டார். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிமன்றம், "மேல்முறையீட்டாளரின் செயலைக் கருத்தில் கொள்ளும்போது, ஒரு பெண்ணின் கண்ணியத்தை மதிக்காதது போல் தோன்றுகிறது. நான்கு வயது பெண் குழந்தையுடன் கூட பாலியல் குற்றத்தில் ஈடுபடும் மனப்பான்மை கொண்டவர். ஏற்கனவே, அனுபவித்த தண்டனை காலமாக தண்டனையை குறைக்கும் வழக்காக இந்த வழக்கை கருதவில்லை.


இருப்பினும், பாதிக்கப்பட்ட சிறுமியை உயிருடன் விட்டுச் செல்லும் அளவுக்கு அவர் கருணை காட்டினார் என்ற உண்மையைக் கருத்தில் கொண்டு, ஆயுள் தண்டனையை 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையாகக் குறைக்கலாம் என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது" எனக் கூறியுள்ளது.