சிறார்கள் பாலியல் உறவு கொள்வது தற்போது பெரும் பிரச்னையாக மாறியுள்ளது. குறிப்பாக, சிறார் ஒருவரின் முழு சம்மதத்துடன் வயது வந்த ஒருவர் பாலியல் உறவு கொண்டாலும், போக்சோ சட்டத்தின் கீழ் அது குற்றமாக பார்க்கப்படுகிறது. 


சில சமயங்களில், சிறார்கள் பாலியல் உறவில் ஈடுபடும்போது சிறுமியின் பெற்றோர் அல்லது உறவினர் புகார் அளிக்கும்பட்சத்தில், பாலியல் உறவில் ஈடுபடும் சிறாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதில், பிரச்னை என்னவென்றால் பெரும்பாலான வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்படாமல் முடித்துவைக்கப்படுவதுதான்.


பாலுறவு கொள்ளும் சிறார்கள்:


மேலும், சிறுமியின் பெற்றோர்/உறவினர் புகார் அளிக்கும் வழக்குகளில், முழு சம்மதத்துடன்தான் குற்றம்சாட்டப்பட்டவருடன் பாலியல் உறவு கொண்டதாக சிறுமிகள் பெரும்பாலான நேரங்களில் வாக்குமூலம் அளிக்கின்றனர்.


கடந்த 2012ஆம் ஆண்டு, போக்சோ சட்டத்தில், சிறார்கள் பாலியல் உறவு கொள்ள அனுமதிக்கும் வயது 16-இல் இருந்து 18-ஆக உயர்த்தப்பட்டது. இதனால், 16 வயதுக்கு மேற்பட்ட சிறார்கள் முழு சம்மதத்துடன் பாலியல் உறவு கொண்டாலும் அது குற்றமாக கருதப்பட்டு வருகிறது.


முன்னதாக, 1940ஆம் ஆண்டிலிருந்து 2012ஆம் ஆண்டு வரை, பாலுறவு சம்மத வயது 16-ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதை கருத்தில் கொண்ட பல்வேறு நீதிமன்றங்கள், "இளம் வயதினர், பாலியல் உறவு கொள்ளும் வழக்குகளை கையாள சட்டத்தில் சீர்திருத்தம் மேற்கொள்வது அவசியம்" என தெரிவித்தது.


போக்சோ சட்டத்தின் கீழ் பாலுறவு சம்மத வயதை தற்போதைய 18லிருந்து நாடாளுமன்றம் குறைக்க வேண்டும். அதற்கு, ஆவலுடன் காத்து கொண்டிருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தது.


வேறோர் வழக்கில், பாலுறவு சம்மத வயதை 16ஆக குறைக்க சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை வழங்கியது. இதை தொடர்ந்து, இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்,  போக்சோ சட்டம், 2012இன் கீழ் பாலுறவு சம்மத வயதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நாடாளுமன்றத்திற்கு  கோரிக்கை விடுத்தார்.


இந்த நிலையில், இதே கருத்தை மத்திய பிரதேச உயர் நீதிமன்றமும் முன்வைத்துள்ளது. பாலுறவு சம்மத வயதை 18-இல் இருந்து 16-ஆக குறைக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதி பரிந்துரை செய்துள்ளார். பாலியல் வன்கொடுமை செய்ததாக 20 வயது இளைஞருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்த நீதிபதி தீபக் குமார் அகர்வால், இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.


வழக்கின் பின்னணி:


மத்திய பிரதேச மாநிலத்தில் 16 வயது சிறுமியை 20 வயது இளைஞர், 6 மாதங்களாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகவும் கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், அவரை கர்ப்பமாக்கியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.


இந்த ஆண்டு ஜூலை மாதம், அந்த நபர் கைது செய்யப்பட்டு, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அடுத்த மூன்று ஆண்டுகள் ஜாமீன் இல்லாமல் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


இந்த வழக்கை விசாரித்த மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம், "2012 ஆம் ஆண்டு, பாலுறவு சம்மத வயதை 16 லிருந்து 18 ஆக உயர்த்திய சட்டத் திருத்தம் சமூகத்தின் கட்டமைப்பை சீர்குலைத்துள்ளது. தற்போது, ​​14 வயதிற்குட்பட்ட ஆணும் பெண்ணும், சமூக ஊடகத்தின் வழியாக கிடைத்த விழிப்புணர்வு காரணமாகவும் எளிதில் கிடைக்கக்கூடிய இணைய வசதி காரணமாகவும் இளம் வயதிலேயே பருவமடைகின்றனர்.


இளம் வயதிலேயே பருவமடைதல் காரணமாக ஆண்களும் பெண்களும் ஒருவருக்கொருவர் ஈர்க்கப்படுகிறார்கள். இறுதியில் ஒருமித்த சம்மதத்துடன் பாலியல் உறவில் ஈடுபடுகின்றனர். இந்த வழக்குகளில், ஆண்கள் குற்றவாளிகள் அல்ல. பருவ வயது சிறுவர்கள் குற்றவாளிகளாக நடத்தப்படும் அநீதியை தவிர்க்க, பாலுறவு சம்மத வயதை 18இல் இருந்து 16 ஆக குறைக்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்றார்.