நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ஆம் தேதி நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பிரகலாத் ஜோஷி வெளியிட்டுள்ளார். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, நாடாளுமன்ற கூட்டத்திற்கான தேதிகளை இறுதி செய்தது.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடத்தப்படுமா?
தேசிய நிதித் தகவல் பதிவேடு, டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்பு மசோதா, திவால் திருத்தச் சட்டம் உள்ளிட்டவை வரும் நாடாளுமன்ற அமர்வில் விவாதிக்கப்பட்டு, நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய நாடாளுமன்ற கட்டிடம் தொடர்பான சில பணிகள் இன்னும் நிறைவு பெறவில்லை. நிலுவையில் உள்ள பணிகள் இன்னும் சில நாட்களில் முடிந்தால், பிரதமர் நரேந்திர மோடியால் மே 28ஆம் தேதி திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிர்வலைகளை கிளப்ப உள்ள கூட்டத்தொடர்:
டெல்லி அவசர சட்ட விவகாரம், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு பதிலாக தாக்கல் செய்யப்படும் மசோதா, டெல்லியின் துணை நிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும்.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசின் அவசரச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த விவகாரத்தில் பாஜக தலைமையிலான அரசுக்கு எதிராக மோதலில் ஈடுபட்டு வருகிறார். டெல்லி அதிகாரிகளை கட்டுப்படுத்துவது தொடர்பான மசோதாவை மாநிலங்களவையில் வீழ்த்த எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார் கெஜ்ரிவால்.
பெரும் பாதிப்பை சந்தித்து வரும் மழைக்கால கூட்டத்தொடர்:
கடந்த 2021ஆம் ஆண்டு மழைக்கால கூட்டத்தொடர், பெகாசஸ் விவகாரத்தாலும் 2022ஆம் ஆண்டு கூட்டத்தொடர் விலைவாசி உயர்வு பிரச்னையாலும் பெரும் பாதிப்படைந்தது. இந்தாண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் அதானி விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில், நாடாளுமன்ற கூட்டு விசாரணை நடத்த வேண்டும் எதிர்க்கட்சிகள் முதல் பாதியை முடக்கியது.
பிரிட்டனில் ராகுல் காந்தி பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுப்பட்டனர். இதனால், பட்ஜெட் கூட்டதொடரும் பெரும் பாதிப்பை சந்தித்தது. பல முக்கியமான சட்டங்கள் விவாதிக்கப்படாமல் நிறைவேற்றப்பட்டன.
அவதூறு வழக்கில் தண்டனை பெற்றுள்ள ராகுல் காந்தி, நாடாளுமன்ற உறுப்பினராக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், வரும் மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து மத்திய பாஜக அரசுக்கு காங்கிரஸ் நெருக்கடி தர முயலும் என கூறப்படுகிறது.