மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் உமா பாரதி. முன்னாள் மத்திய அமைச்சரும் ஆவார். இந்துத்துவ கொள்கையில் தீவிரமான இவர் மத்திய பிரதேசத்தின் போபாலில் உள்ள மதுக்கடைக்குள் புகுந்து கல் ஒன்றை வீசும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.




இந்த வீடியோவை உமாபாரதியே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக, அவர் பதிவிட்டிருப்பதாவது, போபாலில் உள்ள பர்கேதா பதானி ஆசாத் நகர், பி.எச்.இ.எல். பகுதியில் உள்ள லேபர் காலனியில் உள்ள மதுபானக் கடைகள் ஒரு பெரிய முற்றத்தில் மக்களுக்கு மதுவை வழங்குகின்றன” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். அவரது பதிவிற்கு கீழ் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.






உமாபாரதி கடந்தாண்டு மாநிலத்தில் மதுவை தடை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தெருக்களில் சென்று தடியால் அடிப்பேன் என்று கூறினார். ஆனால், அவர் அறிவித்த சில நாட்களிலே மத்திய பிரதேசத்தில் மதுவிற்பனைக்கு புதிய கொள்கை உருவாக்கப்பட்டது. இதன்படி, மத்திய பிரதேசத்தில் மது மிகவும் குறைவான விலைக்கு கிடைக்கும் வகையில் விற்கப்பட்டு வருகிறது.


அந்த மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் வெளிநாட்டு மதுபானங்களுக்கான வரியை 10 முதல் 13 சதவீதமாக குறைத்தார். இதன்பின்பு, அந்த மாநிலத்தில் உள்ள மதுக்கடைகளில் வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உமாபாரதி மதுக்கடைக்குள் புகுந்து மது பாட்டில்களை கல்லால் உடைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




மத்திய பிரதேசத்தில் மட்டும் 2 ஆயிரத்து 544 உள்நாட்டு மது விற்பனை கடைகளும், 1,061 வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனை கடைகளும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த மாநிலத்தில் ஒரு கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வீடுகளிலே பார்கள் திறந்து கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட அளவை விட தற்போது 4 மடங்கு வரை மதுபான பாட்டில்களை வீட்டிலே வைத்திருக்க அம்மாநில அரசு அனுமதித்துள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண