MP Firecracker Factory Blast: மத்திய பிரதேச மாநிலம் ஹர்தா பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 11 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  


11 பேர் உயிரிழப்பு:


மத்திய பிரதேச மாநிலம் ஹர்தாவ் என்ற பகுதியில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில், திடீரென வெடி விபத்து ஏற்பட்டிருக்கிறது.  இந்த விபத்தின்போது பட்டாசு ஆலையில் 150க்கும் மேற்பட்டோர்  பணியில் இருந்துள்ளனர். இன்று நண்பகல் நேரத்தில் ஏற்பட்ட வெடி விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் போன்று காட்சியளித்தது.  வெடி சத்தம் பெரிதாக கேட்டதால் அருகில் உள்ள சாலைகளில் மக்கள் பயத்துடன் அங்குமிங்கும் ஓடினர்.


வெடி விபத்து தொடர்பாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து, போலீசாரும், தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 50க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் மற்றும் 400க்கும் மேற்பட்ட போலீசார் விபத்து நடத்த இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.


 இந்த கோர வெடி விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த வெடி விபத்தில் 100க்கும் மேற்பட்டோரை மீட்ட நிலையில், அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயங்கர விபத்தினால் எழுந்த தீ மற்றும் புகையினால் அருகில் உள்ள இடங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பட்டாசு ஆலை அருகே உள்ள 60க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தீ பரவியதால்  குடியிருப்புவாசிகள் அச்சம் அடைந்துள்ளனர். 


ரூ.2 லட்சம் நிவாரணம்






மத்திய பிரதேச பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி. இதுகுறித்து பதிவிட்டுள்ள எக்ஸ் தளத்தில், "மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தாவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த செய்தி கேட்டு வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உள்ளாட்சி நிர்வாகம் உதவி செய்யும். இந்த வெடி விபத்தில் உயிரிந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். மேலும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.