பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐந்து மாநில தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், கடந்த நவம்பர் 7ஆம் தேதி, ஐந்து மாநில தேர்தல் தொடங்கியது.
சத்தீஸ்கரின் முதல் கட்ட வாக்குப்பதிவும் மிசோரத்தில் ஒரே கட்டமாகவும் கடந்த 7ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இன்று சத்தீஸ்கரின் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. சத்தீஸ்கருடன் மத்திய பிரதேசத்துக்கும் இன்று தேர்தல் நடத்தப்படுகிறது.
தேர்தலில் ஆதிக்கம் செலுத்த தொடங்கிய ஏஐ:
ஏஐ என்னும் செயற்கை நுண்ணறிவு, அசரவைக்கும் பல செயல்களை செய்து வரும் நிலையில், தேர்தலிலும் அதன் ஆதிக்கம் தொடங்கியுள்ளது. அந்த வகையில், மத்திய பிரதேசம் இந்தூரில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் வாக்குச்சாவடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
குறிப்பிட்ட இந்த வாக்குச்சாவடியில் மக்கள் வரிசையில் நின்று வாக்களிக்க வேண்டாம். செயற்கை நுண்ணறிவு பொருத்தப்பட்ட கேமராவின் உதவியுடன் மை வைக்கப்படும் விரலை செல்ஃபி எடுத்து கொள்ள வழிவகை செய்கிறது. நந்தா நகரில் உள்ள மா கனகேஸ்வரி தேவி அரசு கல்லூரியில் ஸ்மார்ட் வாக்குச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் வாக்குச்சாவடியின் சிறப்பம்சங்களை எடுத்துரைக்கும் இந்தூர் ஸ்மார்ட் சிட்டி டெவலப்மென்ட் லிமிடெட்டின் உதவி திட்ட மேலாளர் ரூபால் சோப்ரா, "ஸ்மார்ட் வாக்குச் சாவடியில் வரிசையில் நிற்காமல் இருக்க, ஆன்லைன் டோக்கன் முறையை அறிமுகப்படுத்தியுள்ளோம். வாக்களிக்க வரும் மக்களுக்கு டோக்கன் எண்கள் வழங்கப்படும்.
ஸ்மார்ட் வாக்குச்சாவடியின் சிறப்பம்சங்கள்:
அவர்கள் தங்கள் முறை வரும் வரை வாக்குச்சாவடியில் வசதியாக அமர்ந்து கொள்ளலாம். வாக்குச் சாவடியில் டிஜிட்டல் செல்ஃபி பாயிண்ட் ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. அங்கு ஏஐ வசதி உள்ள கேமரா பொருத்தப்பட்டுள்ளது. வாக்களித்த பிறகு, ஒருவர் இந்த இடத்தில் நின்று கேமராவில் மை உள்ள விரலைக் காட்டினால், உடனடியாக செல்ஃபி கிளிக் செய்யப்படும்.
அதற்கான பார்கோடு செல்ஃபி பாயின்ட்டில் திரையில் தோன்றும். அதை ஸ்கேன் செய்வதன் மூலம் புகைப்படம் வாக்காளரின் மொபைல் ஃபோனுக்கு அனுப்பப்படுவது உறுதி செய்யப்படும். பின்னர், அதை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளலாம்" என்றார்.
பாஜகவின் கோட்டையாக கருதப்படும் மத்திய பிரதேசத்தில் கடந்த 20 ஆண்டுகளில் 19 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் தனிப்பெரும் கட்சியான காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. ஆனால், 15 மாதங்களிலேயே காங்கிரஸ் ஆட்சியை பாஜக கவிழ்த்தது.
இதை தொடர்ந்து, காங்கிரஸ் எம்எல்ஏக்கள், பாஜகவுக்கு தாவினார்கள். பாஜக மூத்த தலைவர் சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார்.