மேற்குவங்கம் மாநிலத்தில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாட்டில் ஏற்கனவே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவத்தால் மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் நோயாளியின் உறவினர் குடிபோதையில் பெண் மருத்துவரிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார்.
மீண்டும் பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை:
25 வயது ஜூனியர் பெண் மருத்துவரின் அறைக்குள் நுழைந்து தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, இதுகுறித்து விசாரணை செய்ய மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஜா யஷ்வந்த்ராவ் மருத்துவமனையில் (MYH) இந்த சம்பவம், சனிக்கிழமை இரவு நடந்ததுள்ளது. இதுகுறித்து ஜூனியர் டாக்டர் சங்கம் தரப்பில் கூறுகையில், "மத்தியப் பிரதேசத்தில் அரசாங்கத்தால் நடத்தப்படும் மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்று இது.
கொல்கத்தா மருத்துவமனையில் ஜூனியர் டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்" என்றார். இதுகுறித்து கல்லூரியின் டீனும் மருத்துவருமான சஞ்சய் தீட்சித் கூறுகையில், "பெண் டாக்டருக்கு நடந்த சம்பவம் குறித்து விசாரிக்க நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது. கூடிய விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கும்" என்றார்.
பெண்களுக்கு எதிராக தொடரும் குற்றச் செயல்கள்:
மேற்குவங்கத்தில் மருத்துவர் சம்பவத்தை தொடர்ந்து செவிலியர் ஒருவரை நோயாளி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுத்தினார். பிர்பூமில் உள்ள இளம்பஜார் சுகாதார நிலையத்தில் செவிலியர் பணியில் இருந்தபோது, நோயாளி ஒருவரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சுகாதார நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட நோயாளிக்கு சிகிச்சை அளிக்கையில், அவர் செவிலியரை தகாத இடத்தில் தொட்டதாக கூறப்படுகிறது.
பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் இம்மாதிரியான வெறிச் செயல்கள் அரங்கேறி வருகின்றன. இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கு கடந்தாண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
சமீபத்தில், உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானி நகரில் சேக்ரட் ஹார்ட் பள்ளி அருகே இரண்டு பெண்களை சில ஆண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கினர். கொல்கத்தா சம்பவம் குறித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வேதனை தெரிவித்த சில மணி நேரங்களிலேயே உத்தரகாண்ட் சம்பவத்தின் வீடியோ வெளியாகி இருந்தது.