மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திக் விஜய் சிங் தனது படத்தை பாரத் ஜோடோ யாத்திரை விளம்பரங்களில் பயன்படுத்த வேண்டாம் என்று கூறியுள்ளார்.
ராகுல் காந்தி மத்தியப் பிரதேசத்தில் விரைவில் யாத்திரை மேற்கொள்ளவிருக்கிறார். இந்நிலையில் தான் அம்மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், ராகுல் காந்தி மத்தியப் பிரதேசம் வரும்போது விநியோகிக்கப்படவுள்ள பிரச்சாரங்கள், விளம்பரங்களில் தனது படத்தை அச்சிட வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார். மாறாக சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் படங்களை மட்டுமே அச்சிடவும் என்று கூறியுள்ளார். மேலும் மத்தியப்பிரதேசத்தில் நடைபெறும் பாரத் ஜோடோ யாத்திரை தொண்டர்கள் மத்தியில் உத்வேகத்தை விதைக்கட்டும். எப்போதெல்லாம் எனது உதவி தேவையோ அப்போதெல்லாம் நான் அங்கிருப்பேன். மத்தியப் பிரதேசத்தில் பாரத் ஜோடோ யாத்திரை மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
முன்னாள் முதல்வரான திக்விஜய் சிங், தனது புகைப்படம் போஸ்டர்களில் பயன்படுத்துவது காங்கிரஸுக்கான வாக்குகளை பெறுவதில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று இதற்கு முன்னரும் கூறியிருக்கிறார். 2018 மாநில தேர்தலில் ஒரு வீடியோவில் அவர் இதனைக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். அதனாலேயே தனக்கு ஒருங்கிணைப்புக் குழு பதவி வழங்கப்பட்டதாகவும் தான் திரைமறைவில் இருந்து தொண்டர்களை ஊக்குவிப்பதாகவும் கூறினார்.
அரசியலாக்கும் பாஜக..
ஆனால் இந்த விவகாரத்தை ஆளும் பாஜக அரசு அரசியலாக்கியுள்ளது. இது குறித்து மாநில அமைச்சர் விஸ்வாஸ் சாரங் கூறுகையில், கண்காணிப்புக் குழுவில் திக்விஜய் சிங் 29வது இடத்தில் இருக்கிறார். அவரைவிட பல வயது சிறியவர்களான பிரியங்கா காந்தி, ரன்தீப் சூரஜ்வாலா ஆகியோர் கூட முன்னணியில் உள்ளனர். காங்கிரஸ் கட்சி மத்தியப் பிரதேச காங்கிரஸுக்கு திக்விஜய சிங்கின் புகைப்படங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று கூறியிருக்கலாம். ஆனால் அதை வேறு விதமாக வெளியில் சொல்லி அவர் அரசியலில் ஆதாயம் பெற மக்கள் அனுதாபத்தை பெற நினைத்திருக்கலாம் என்று விமர்சித்துள்ளார்.
பாரத் ஜோடோ யாத்திரை:
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரையை (ஒற்றுமை யாத்திரை) காங்கிரஸ் முன்னெடுத்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்.7 ஆம் தேதி கன்னியாகுமரியில் இந்த யாத்திரையை தொடங்கினார். தமிழக முதல்வர் ஸ்டாலின் ராகுல் காந்தியிடம் தேசிய கொடியைக் கொடுத்து யாத்திரையை தொடங்கி வைத்தார். இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் யாத்திரை மேற்கொண்ட ராகுல் காந்தி விரைவில் மத்தியப் பிரதேசத்தில் பயணம் செய்கிறார். இந்நிலையில் தான் திக்விஜய சிங் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே காங்கிரஸ் ஜோடோ யாத்திரை அதாவது காங்கிரஸ் ஒற்றுமை யாத்திரை தான் தேவை எனக் கூறும் பாஜகவுக்கு இந்த விஷயம் வெறும் வாய்க்குக் கிடைத்த அவல் போன்றாகிவிட்டது என்று கூறப்படுகிறது. இந்த யாத்திரை தொடங்கிய நாளிலேயே கோவா காங்கிரஸில் பெரும் பிரளையமே ஏற்பட்டது. பின்னர் காங்கிரஸ் தலைவர் தேர்தலை வைத்து அசோக் கெலாட் சில சர்ச்சைகளை உருவாக்கினார். இந்நிலையில் இப்போது திக்விஜய சிங் தனது அதிருப்தியை மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.