அரசு மருத்துவமனைகளில் அதிகாரிகள் அலட்சியமாக நடந்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, மத்திய பிரதேசத்தில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சாகர் மாவட்டத்தின் மருத்துவமனை ஒன்றில் பிணவறையில் வைக்கப்பட்ட இரண்டு உடல்களில் இருந்த கண்கள் காணாமல் போயுள்ளது.


15 நாள்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளது. சாகர் மாவட்ட மருத்துவமனையில் இறந்த உடல்களின் கண்களை எலிகள் கடித்து தின்றதாக கூறப்படுகிறது. முதல் சம்பவம் ஜனவரி 4ஆம் தேதியும் இரண்டாவது சம்பவம் ஜனவரி 19ஆம் தேதியும் நடந்துள்ளது.


கடந்த ஜனவரி 4ஆம் தேதி, 32 வயதான மோதிலால் கவுண்ட் அமெட் கிராமத்தில் உள்ள ஒரு பண்ணையில் மயங்கி விழுந்ததால் அவரது குடும்பத்தினர் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


மருத்துவமனையின் OPD சிகிச்சையில் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. காலை, பிரேத பரிசோதனைக்காக டாக்டர் வந்து பார்த்தபோது, ​​சடலத்தின் ஒரு கண் காணவில்லை. ​​ஃப்ரீசர் பழுதுபோனதால் பிணவறையில் உள்ள திறந்தவெளி மேஜையில் சடலம் கிடந்துள்ளது.


மருத்துவமனைகள் குறித்த சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் அடிக்கடி கேள்விக்குள்ளாகி வருகின்றன. மருத்துவமனையில் மின்வெட்டு போன்ற பிரச்சனைகளால் இந்திய அரசு மருத்துவமனைகள் பல முறை விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.


அதே போல பாதுகாப்பு விதிகளும் சரியாக கடைப்பிடிக்கப் படுவதில்லை என்று கூறப்பட்டு வரும் நிலையில், நோயாளிகளின் நிலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது.


அதேபோல, 25 வயதான ரமேஷ் அஹிவார் ஜனவரி 16 அன்று மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வென்டிலேட்டர் உதவியில் வைக்கப்பட்டார். மறுநாள் இரவு அவர் இறந்துபோனார். ஜனவரி 15ஆம் தேதி யாருக்கும் தெரிவிக்காமல் ரமேஷ்  எங்கோ சென்றிருக்கிறார். 


மறுநாள் அவர் காயமடைந்த நிலையில் காணப்பட்டார். இந்த விவகாரம் மருத்துவ சட்டத்திற்கு உட்பட்டது என்பதால், மருத்துவமனை நிர்வாகம் இரண்டு முறை போலீசாரை அழைத்து புகார் அளித்தது.


ஜனவரி 19ம் தேதி, டீப் ஃப்ரீசரில் இருந்து சடலத்தை வெளியே எடுத்தபோது, ​​ஒரு கண் காணவில்லை. இதுகுறித்து மாவட்ட மருத்துவமனையின் குடியுரிமை மருத்துவ அதிகாரி டாக்டர் அபிஷேக் தாக்குர் கூறியதாவது, "பிணவறையில் ஃப்ரீசரில்தான் இறந்தவரின் உடல் வைக்கப்பட்டது.


முதற்கட்ட விசாரணையில், இறந்தவரின் கண்களை எலிகள் கடித்திருக்கலாம் என கூறப்பட்டது. பிணவறையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். விரிவான விசாரணைக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.


மருத்துவமனையின் தலைமை மருத்துவ சுகாதார அதிகாரி (CMHO), டாக்டர் மம்தா திமோரி, சிவில் சர்ஜன் டாக்டர் ஜோதி சவுகான் உட்பட நான்கு மருத்துவ அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் 48 மணி நேரத்திற்குள் பதில் அளிக்குமாறு கோரியுள்ளார்.


சமீபத்தில் கூட, மத்தியப் பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) மாடு ஒன்று இருப்பது போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.