மகா சிவராத்திரி தினத்தில் மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


சிவராத்திரி:


சிவனுக்குரிய விரதங்களில் முதன்மையானது சிவ ராத்திரி விரதம். சிவ ராத்திரி விரதம் ஐந்து வகைப்படும். அவை நித்திய சிவ ராத்திரி, மாக சிவ ராத்திரி, யோக சிவ ராத்திரி, பட்ச சிவ ராத்திரி, மாத சிவ ராத்திரி ஆகும். இவற்றில் மகா சிவ ராத்திரி என்பது மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசியில் வருவது. அந்த வகையில் 2023 ம் ஆண்டு மகா சிவ ராத்திரி இன்று (பிப்ரவரி 18ஆம் தேதி) வருகிறது. இன்று சனிப் பிரதோஷம் மற்றும் திருவோண நட்சத்திரம் இணைந்து வருவதால், கூடுதல் சிறப்பைப் பெற்றுள்ளது. 


பிரதமர் மோடி மகா சிவராத்திரி வாழ்த்து


இந்நிலையில் மகா சிவராத்திரி தினத்தில் மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி, “மகா சிவராத்திரியின் மிகச் சிறப்பான நாளில் ஒவ்வொருவருக்கும் வாழ்த்துக்கள்.


நாட்டு மக்கள் அனைவருக்கும் மஹா சிவராத்திரியின் எல்லையற்ற நல் வாழ்த்துக்கள். எங்கும் நிறைந்த சிவன்!" என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். 


சிவாலய வழிபாடு:


இதை ஒட்டி உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் மகாசிவாராத்திரியை மிகச் சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதில் தஞ்சை திலகர் திடலில் 18ஆம் தேதி மாலை 6 மணி முதல் 8. 15 மணி வரை டி.கே.எஸ்.பத்மநாபன் குழுவினர் மங்கள இசை, மாலை 6.15 மணி முதல் 6.30 மணி வரை சிவனேசன், தீபக்ராஜா வழங்கும் திருமுறை விண்ணப்பம், மாலை 6.30 மணி முதல் 7 மணி வரை ஆரம்ப விழா குத்து விளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதேபோல திருவண்ணாமலை உள்ளிட்ட மற்ற பிரபல சிவன் கோயில்களிலும், வழிபாட்டுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.


குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகை


கோவையில் ஈஷாவின் மகா சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக 2 நாட்கள் பயணமாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விமானம் மூலமாக டெல்லியில் இருந்து தமிழ்நாட்டுக்குப் புறப்பட்டார். தனி விமானம் மூலமாக மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த குடியரசுத் தலைவர் விமான நிலையத்தில் இருந்து காரில் பயணம் செய்து மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். மதிய உணவுக்குப் பிறகு  மீண்டும் மதுரை விமான நிலையத்திற்கு சென்று விமானம் மூலமாக குடியரசுத் தலைவர் கோவை செல்ல உள்ளார். அங்கு நடைபெறும் மகா சிவராத்திரி நிகழ்வில் திரௌபதி முர்மு கலந்து கொள்ள உள்ளார்.