பிரதமர் மோடியின் தாயார் ஹீராபா மோடி, இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதை முன்னிட்டு, குஜராத் காந்திநகரில் உள்ள அவரது வீட்டில் தாய் ஹீராபெனை சந்தித்து மோடி ஆசி பெற்றார். பின்னர், தனது தாயாரின் கால்களை மோடி தண்ணீரை ஊற்றி கழுவினார்.


இதுகுறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "மா…இது வெறும் வார்த்தையல்ல, ஆனால் பலவிதமான உணர்ச்சிகளைப் படம் பிடிக்கிறது. இன்று ஜூன் 18ஆம் தேதி, அன்னை ஹீராபா தனது 100வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாள். இந்த சிறப்பான நாளில், மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தும் சில எண்ணங்களை எழுதியுள்ளேன்" என பதிவிட்டுள்ளார்.


 






தாயாரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி உணர்வுபூர்வமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், "இன்று, என் அம்மா ஹீராபா தனது நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இது அவரது நூற்றாண்டு பிறந்தநாள். என் தந்தை உயிருடன் இருந்திருந்தால், அவரும் கடந்த வாரம் தனது 100வது பிறந்தநாளைக் கொண்டாடியிருப்பார். 2022 ஆம் ஆண்டு எனது தாயாரின் நூற்றாண்டு விழா தொடங்கும் ஒரு சிறப்பான ஆண்டாகும். மேலும் எனது தந்தை தனது பிறந்த நாளை நிறைவு செய்திருப்பார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஒரு நாள் பயணமாக குஜராத்திற்கு சென்றுள்ள பிரதமர் மோடி, வதோதராவில் உள்ள பேரணயில் கலந்து கொள்கிறார். பின்னர், பாவகத் கோயிலுக்கு செல்கிறார்.


மோடியின் தாயாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் சொந்த ஊரான வட்நகரில் சமய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் உள்ள ஜெகநாதர் கோயிலில் உணவு வழங்க மோடி குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.


ஹீராபென் மோடி, பிரதமரின் இளைய சகோதரர் பங்கஜ் மோடியுடன் காந்திநகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள ரேசன் கிராமத்தில் வசித்து வருகிறார்.


ஹீராபென் மோடியின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு, ரேசன் பகுதியில் உள்ள 80 மீட்டர் நீள சாலைக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. இதுகுறித்து காந்திநகர் மேயர் ஹிதேஷ் மக்வானா கூறுகையில், "ஹிராபென் தனது 100வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் போது, ​​அடுத்த தலைமுறையினர் அவரது வாழ்க்கையிலிருந்து உத்வேகம் பெறும் வகையில், ரேசன் பகுதியில் உள்ள 80 மீட்டர் சாலைக்கு பூஜ்யா ஹிராபென் மார்க் என்று பெயரிட முடிவு செய்துள்ளோம்" என்றார்.